“அதிமுக டிடிவி தினகரன் வசம் வருகிறதா?” அண்ணாமலை யாரை மிரட்டுகிறார்?
“ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, அதிமுக கட்சி டிடிவி தினகரன் வசமாகும்” என்றும், இனி இபிஎஸ் தலைமையிலான அதிமுக இங்கு இருக்காது” என்றும் அண்ணாமலை சூளுரைத்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சூடுப்பிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் சூட்டை கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சூடு பறக்கிறது. அனல் தகிக்கிறது. அரசியல் வெப்பம் துளியும் குறைந்பாடில்லை.
இந்த நிலையில் தான், தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் ‘மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக டிடிவி வசம் போகும்” என்று, அரசியல் சரவெடியாக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, தேனியில் டிடிவி தினகரனுடன் பிரசார வாகனத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, “தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளம் தான் தற்போது நடைபெறும் மக்களவை தேர்தல்.
2024 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், தமிழகத்தை மு.க. ஸ்டாலினிடம் இருந்து முதலில் நாம் காப்பாற்ற வேண்டும்” என்று சூளுரைத்தார்.
குறிப்பாக, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக என்ற கட்சி தற்போது ஒப்பந்ததாரர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களையும், அவர்களது வாரிசுகளையும் மட்டுமே வேட்பாளராக போட்டியிட வைத்து இருக்கிறார். மக்களவை தேர்தலுக்கு பிறகு, அதிமுக என்ற கட்சி எடப்பாடி பழனிசாமியிடம் சுத்தமாக இருக்காது. அந்த கட்சி, டிடிவி தினகரனிடம் இருக்கும்” என்றும்,தனது பேச்சாள் அதிரடி காட்டினார்.
இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அண்ணாமலை என்ன சூப்பர் ஸ்டாரா? அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது: அமித்ஷா எதையாவது பேசுவார்” என்றும், மிக கடுமையான விமர்சனகளை செல்லூர் ராஜூ முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.