Sun. Jan 12th, 2025

அய்யயோ.. நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் இனி அவ்ளோ தான்! தலையிட்ட நீதிமன்றம்..

By indiamediahouse Jun6,2024

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் மாறி மாறி ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். ஆனால், அப்படி இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், அதையும் மீறி ஸ்டக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், வாகனங்களின் முன் பக்கம், பின் பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள், நடிகர்கள் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும் எனவும், பேரூந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

குறிப்பாக, ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20 ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர். முக்கியமாக, அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *