Tue. Jul 1st, 2025

தமிழ்நாடு இந்தியாவா? ஹிந்தியாவா? ஒரே அணியாக திரண்ட அரசியல் கட்சிகள்…

By Joe Mar5,2025 #party . #TamilNadu #TNPolitics

8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் தமிழ்நாட்டுக்கு இருக்கா? அனைத்து கட்சி கூட்டத்தில் என்ன நடந்துச்சு? எந்தெந்த அரசியல் தலைவர்கள் என்ன மாதிரியான கருத்துக்களை முன் வச்சாங்க? வாங்க விரிவா பார்க்கலாம்..

தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளை கூட்டினாலோ, குறைத்தாலோ தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள் என்பது, தமிழக அரசின் வாதம். இங்க இருக்ககூடிய பெரும்பாலன கட்சிகளின் வாதம் இதுதான்.

இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றனர். பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

ஆனால், அனைத்து கட்சி கூட்டம் தொடங்கும் முன்பாக, முதலமைச்சர் மு.க. தனது X தளத்தில் ஒஒரு முக்கியமான பதிவை வெளியிட்டு இருந்தார். “சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2 ஆயிரத்து 435 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியிருக்கு. ஆனால், தமிழ் மொழிக்கு வெறும் 167 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது” என்கிற பகிரங்கமான குற்றச்சாட்டு தான் அது!

குறிப்பாக, “ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ள மெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது பாஜக அரசு. தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் பேசுபவர்களை இராண்டாம் தரக் குடிமக்களாக நடத்த பாஜக முயற்சிக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது X தள பதிவில் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் டிவிட்டர் பதிவுக்குப் பிறகு தான், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை தொடங்கி வச்சு பேசும்போது, “தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பலம் குறைக்கப்படுவதோடு, தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கி கொண்டுள்ளது. தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு நாம் அனைவரும் தள்ளப்பட்டு உள்ளோம்” என்று பேசினார்.

“மக்கள் தொகை குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் அதாவது, 8 மக்களவை இடங்களை இழக்கும் உருவாகும். நாடாளுமன்ற தொகுதிகளை உயர்த்தினால், அதன் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்படக் கூடும். தற்போதைய மக்கள் தொகைப்படி மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டிற்கு 22-க்கு பதிலாக 10 தொகுதிகள் தான் கிடைக்கும்.

ஆனால்,1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அபாயகரமான செயல். தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று, பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார் முதல்வர்.

“சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டில் குரல் அப்படியே ஒடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

திமுக

அதன் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். அதன்படி, “இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும்,மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒட்டு மொத்தமாக “மொழிப்போர் விசயம், தொகுதி மறுசீரமைப்பு விசயங்களில், தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசத் தொடங்கினார்கள். அப்போது, அதிமுக சார்பில் வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது” என்று, வலியுறுத்தினார்.

அதிமுக

“மக்களவை தொகுதி வரையரை 1971, மக்கள் தொகையின் கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் தீவிரமான திட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தீவிரமாகவே செயல்படுத்தின. ஆனால், இதே போன்ற கடுமையான நடவடிக்கைகளை வட மாநிலங்கள் செய்யாத காரணத்தால், அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்து உள்ளது.

இந்த சூழலில், தற்போதைய மக்கள் தொகை அடிப்டையில் மக்களவை தொகுதியை மறு ஆய்வு செய்தால், மத்திய அரசின் திட்டத்தை சரியாக செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தாமல் அலட்சியமாக, மெத்தனமாக செயல்பட்ட மாநிலங்களில் பெரிய அளவில் பயன்பெறும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

தவெக

தென் மாநிலங்களுக்கு தொகுதி மறு சீரமைப்பில் இடங்கள் குறைய வாய்ப்புண்டு என்ற குற்றச்சாட்டையே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன் வைத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “ஏற்கனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வேறுபாடு மேலும் மேலும் அதிகரிக்க கூடாது.

தென் மாநிலங்களுக்கு மக்கள் தொகை ஒப்பிட்டு அளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ, அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ, அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று, விஜய் அதிரடியாக கூறியிருக்கிறார்.

TVK

குறிப்பாக தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போதே, அனைத்து உறுப்பினர்களுகு்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே, வாய்ப்பு வழங்கப்பட்டாலும், சில நிமிங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறறது. இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசின் திட்டத்தின் படி மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்து 888 உறுப்பினர்களா உயர்த்தினால், அவர்கள் நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாத அலங்கார பொம்மைகளாகவே இருப்பார்கள்.. இதில் மக்களுக்கு என்ன பயன்? என்று, விஜய் கேள்வி எழுப்பினார்.

மிக முக்கியமாக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. ஆனால், இதையெல்லாம் விட ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. அவற்றை களைவது தான் மத்திய அரசின் கடமை என்று, விஜய் தெரிவித்து இருக்கிறார்.

தவெக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டு, “தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது” என்று, இதே கருத்தையே முன்மொழிந்து இருக்கிறார்.

விசிக

“பாசிச எண்ணம் கொண்டவர்களால் ஒன்றிய ஆட்சி கைப்பற்றப்படும் போது, மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாம் கொண்டுவரும் மக்கள் விரோத சட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்குப் பல்வேறு தந்திரங்களைக் கையாளுகிறார்கள்” என்று, விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

சிபிஐ

“மத்திய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன” என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பகிரங்கமான குற்றச்சாட்டை பாஜக அரசு மீது சுமத்தி இருக்கிறார்.

பாமக

“முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று, இதுபோன்ற குழுவை ஒருங்கிணைக்க வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சில் ஒரு தெளிவு இல்லை” என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம்

“இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை” என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இப்படியாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை குடியரசுத் தலைவர் பிரதமர் , உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பாஜக

ஆனால், அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணித்து இருக்ககூடிய பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து செய்தியாளர்களை சந்திக்கும்போது, “முதல்வர் கூட்டிய கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள உரிமை உள்ளது. ஆனால், எதற்காக இந்த அனைத்து கட்சி கூட்டம் நடந்தது? என்று, எங்களுக்கு புரியவில்லை. அனைத்து கட்சி கூட்டத்த்தை நடத்த வேண்டிய கட்டாயமும், அவசியமும் என்ன இருக்கிறது? நாடாளுமன்ற தொகுதியை 848 ஆக உயர்த்துவதாக முதல்வரிடம் கூறியது யார்?” என்று, அடுக்கடுக்கான கேள்விகளை அண்ணாமலை எழுப்பினார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “மத்திய அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கவும், கிளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகின்றனர். 8 கோடி தமிழர்களிடம் மிகப் பெரிய போராட்டத்தை திணிக்கும் கூட்டமாக தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் இருக்கும்” என்று, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *