“யானைகள் வழித்தடத்தில் ஜக்கியிடம் சரணாகதி ஆகி கூடலூரில் குடும்பங்கள் வெளியேற்றப்படுவதாக” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யானைகள் வழித்தடம் என்று புதிதாக இடங்களை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அடையாளப்படுத்தி, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிக் கிராமங்களில் வாழும் மக்களை, வீடுகளைக் காலி செய்து வெளியேறச் சொல்லி தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நெருக்கடிகள் கொடுத்து நிர்ப்பந்திப்பது மிகமிகக் கொடுமையாக உள்ளது.
அவர்கள் பெரும்பாலும் 1960-களில் சிறிமாவோ-சாஸ்திரி; இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட மலையகத் தமிழர்கள் ஆவார்கள். அவர்களை நீலகிரி மாவட்டத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே அங்கு கொண்டுவந்து அப்போதைய ஆட்சியாளர்கள் குடியமர்த்தினார்கள். அரசின் டான்டீ (Tan Tea) தேயிலைத் தோட்டங்கள் இதற்காகவே உருவாக்கப்பட்டன. அந்த இலங்கை மலையகப் பகுதிகளில் இருந்து வந்த தமிழ்நாட்டு வம்சாவழித் தமிழர்களில் ஒரு பகுதியினர்தாம் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் – கொளப்பள்ளி, சூண்டி போன்ற பல பகுதிகளில் வசிக்கிறார்கள். காவல்துறையினரை வைத்துக் கொண்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற ஆட்சியாளர்கள் முயல்வது கொடுமையானது.
அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வரிகட்டுகிறார்கள். வாக்காளர் அட்டை பெற்றுள்ளார்கள். கால்துறையினரைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்ற ஆட்சியாளர்கள் முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கூடலூர், பந்தலூர் வட்டங்களில் வாழும் பொது மக்கள்-பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைக் கண்டித்தும், தங்கள் வீடுகளில், கடைகளில் கருப்புக்கொடிகட்டி எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். அங்குள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் இந்தக் கருப்புக் கொடி-கண்டன இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் யானை வழித்தடங்களை வாங்கி, மதில்கள் கட்டி மாளிகைகள் எழுப்பியுள்ளார் ஈஷா அதிபர் ஜக்கி வாசுதேவ்! அவர் ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதியும் அவர்கள் கட்டியுள்ள கட்டடங்களும் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்தவையாக உள்ளதால், அக்கட்டு மானங்களை அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தும், வனத்துறை சார்பில் அவரின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எச்சரிக்கை அறிவிப்புக் கொடுத்தும் அவற்றை அப்புறப்படுத்த மறுக்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்.
ஆனால், ஏழை எளிய உழைப்பாளிகளின் வீடுகளை இடிக்க ஜேசிபியுடன் செல்கிறார்கள். ”ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கிறோம்” என்பது திமுக ஆட்சியாளர்களின் பொன்மொழி. ஆனால், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் திமுக ஆட்சியாளர்கள் ஏழையின் அழுகையில் ஏதேச்சாதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஜக்கியின் சிரிப்பில் சரணாகதி அடைகிறார்கள்! இதே காலத்தில் ஒகேனக்கல் நடுத்திட்டுப் பகுதியில் 70ஆண்டுகளாக வசித்துவரும் மீன்பிடித் தொழில் கொண்ட மக்களின் வீடுகளைக் காலிசெய்யச் சொல்லி காவல்துறையுடன் அதிகாரிகள் நடத்திய வன்முறை வன்கொடுமையாகும். பெண்களும் ஆண்களும் கண்ணீர்விட்டுக் கதறக்கதற அவர்களின் வீடுகளின் ஓடுகளைப் பிரித்துக் காலி செய்த கொடுமை அரங்கேறியது.
அம்மக்கள் ஊட்டமலைப்புகுதியில் மாற்று இடம் கொடுத்தால் வீடுகளை நாங்களே பிரித்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறோம் என்று கேட்கிறார்கள். ஆனால் அதிகாரிகள், நாற்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தருமபுரி அருகே வீட்டுமனை தருகிறோம் என்கிறார்கள். இவர்கள் மீன்பிடித் தொழில் செய்பவர்கள். காவிரிக்குத் தொடர்பில்லாத பகுதியில் மனை கொடுத்தால் இவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமது அரசின் மேற்படி முடிவுகளைக் கைவிட்டு, கூடலூர், பந்தலூர், ஒகேனக்கல் மக்கள் வீடுகளைக் காலி செய்யாமல், அவர்களின் வாழ்வுரிமையைக் காக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.