ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த 53 வயதான மருத்துவர் பாலமுருகன், சென்னை அண்ணா நகர் 13 வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மருத்துவர் பாலமுருகனின் மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு ஜஸ்வந்த் குமார் வயது 19, லிங்கேஷ் குமார் வயது 17, ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் படித்து வந்தனர்.
மருத்துவர் பாலமுருகன் சென்னை அண்ணாநகர் மற்றும் செங்குன்றத்தில் என நான்கு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார், மனைவி சுமதி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், குடும்ப வேலைப்பளுவால் சமீப காலமாக நீதிமன்றத்திற்கு செல்வதில்லை என கூறப்படுகிறது.
இவர்கள் சென்னையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில், இவருக்கு கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டு பணிப்பெண் ரேவதி வழக்கம் போல் பாலமுருகன் வீட்டிற்கு வந்த போது, நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதை எடுத்து பலமுறை மருத்துவர் பாலமுருகனுக்கு தொடர்பு கொண்டு அழைப்பை எடுக்காததால், உடனடியாக மருத்துவரின் டிரைவர் விஜய்க்கு தகவல் கொடுத்து உள்ளார்.
இந்த தகவலின் பெயரில் குடியிருப்பு காவலாளி ஜெயராமன், விஜய் பணிப்பெண் ரேவதி ஆகிய மூவரும் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுமதி மற்றும் மூத்த மகன் ஜஸ்வந்த் ஆகியோர் ஒரு அறையிலும், பாலமுருகன் மற்றொரு அறையிலும் லிங்கேஷ்குமார் பூஜை அறையிலும் என தனித் தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் ஸ்கேன் சென்டர் தொழிலில் நஷ்டம் அடைந்ததால், அதனை விரிவு படுத்துவதற்காக 5 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மற்றும் வெளியில் கடன் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. இதனால், அவர் 6 லட்சம் ரூபாய் வரை இஎம்ஐ தொகையை செலுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் டெவலப்மெண்ட் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் பாலமுருகன் தவித்து வந்துள்ளார். இது குறித்து பாலமுருகன் மனைவி சுமதியிடம் பலமுறை புலம்பி அழுததாகவும் தெரிய வந்துள்ளது. கடன் கொடுத்தோர் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு இந்த விபரீத முடிவில் இறங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலமுருகன் ஏதேனும் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முடிவு எடுத்துள்ளாரா என போலீசார் வீட்டில் தேடிய போது இன்று கொடுக்க வேண்டிய நான்கு செக் இருப்பதையும் ஈ.எம்.ஐ.க்கு உண்டான தொகையை எழுதி வைத்திருப்பதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் மற்றும் இது குறித்து ஏதேனும் தெரிவித்துள்ளாரா? என்பதனை ஆய்வு செய்வதற்காக 5 செல்போன்களை போலீசார் வீட்டில் இருந்து பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். போலீசார் வீட்டிற்கு வந்து மிரட்டியவர்கள் யார் என அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.