மதுரையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கின் கீழ் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது 8 ஆம் வகுப்பு மாணவி நேற்று மாலை கடைக்கு சென்று உள்ளார். அப்போது, கடைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது எதிரில் அழுதபடி வந்த சிறுமி, “அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக” பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து மதுரை மாநகர் மகளிர் காவல் துறையினருக்கு பெற்றோர் தகவல் அளித்து உள்ளனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமிக்கு மெக்கானிக்கான 18 வயதான முத்துக்குமார், தனது கூட்டாளிகளான ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் 3 பேர் மற்றும் 17 வயது சிறுவர்கள் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்து உள்ளது தெரிய வந்தது.
அத்துடன், இவர்கள் நீண்ட நாட்களாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தது உறுதியான நிலையில், 6 பேரையும் மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியிலும், சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது குறித்து பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்து உள்ளதும், சிறுமியின் நடவடிக்கைகளை பெற்றோரும் கவனிக்காமல் இருந்துஉள்ளதும், தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான், சிறுமி மனதளவில் அச்சத்துடன் இருப்பதால் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே, மதுரையில் 8 ஆம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்த மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.