நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்தது. இன்னும் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு கவலை தரும் சம்பவமும் அறங்கேறியுள்ளது.
பொதுவாக, ஒரு புது படம் திரைக்கு வருகிறது என்றால் அதிகாலையிலேயே தியேட்டரில் ரசிகர்கள் கூடியிருப்பது வழக்கம். அப்படி தான் புஷ்பா 2 படம் ரிலீஸ் அன்றும் ஹைதராபத்தில் உள்ள ஃபேமஸ் தியேட்டரான சந்தியா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூனும் வந்திருந்தார். அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று மக்கள் கூட்டம் என்றைக்கும் இல்லாமல் அன்று அதிகளவில் கூடியிருந்தனர். இதனால், கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அப்போது படம் பார்க்க வந்த ரேவதி என்பவர் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த அவருடைய குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என இறந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக இன்று ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த அல்லு அர்ஜூனை, தெலங்கானா போலீஸ் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றன. இது விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்களா அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அல்லு அர்ஜூனை காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் இணை பங்குதாரர் உட்பட மூன்று பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.