“நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் “ஓபிஎஸ்-ன் விஸ்வரூபம் தெரிய வரும்” என்று அண்ணாமலை பளீச் பளீச் என்று பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தற்போது கலைக்கட்ட தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஓபிஎஸுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, “தமிழ்நாட்டில் 2 துரோகங்கள் நிகழ்ந்திருக்கிறது” என்று, குற்றம்சாட்டினார்.
“ராமநாதபுரத்தை வளர்க்க வேண்டுமென்றால், முன்னாள் முதலமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், அதற்காகவே ஓபிஎஸ்-க்கு வாக்களிக்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், “ராமநாதபுரத்தில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதிக்கு குடிநீர் கூட கொண்டு வரவில்லை என்றும், தாய்மார்களை குடிநீருக்காக குடம் தூக்கவிட்டது திமுக” என்றும் விமர்சித்தார்.
மேலும், “வெளிநாட்டுத் தலைவர்களே பிரதமர் மோடியுடன் பேச காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் நேரடியாகவே செல்போனில் தொடர்பு கொள்ளும் அளவு மோடிக்கு நெருக்கமாக இருக்கிறார் என்றும், இதற்காகவே நீங்கள் ஓபிஎஸ்-க்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் பேசினார்.
முக்கியமாக,, “மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ்-யின் விஸ்வரூபத்தைப் பார்க்கலாம்” என்றும், அவர் சூளுரைத்தார்.