Mon. Dec 23rd, 2024

Tamilaga Vetri Kazhagam: போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி.. வேறு கட்சி காரர்களுக்கு பதவி கிடையாது – புஸ்ஸி ஆனந்த்!

காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவருக்கு தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த புதிய வீட்டின் திறப்பு விழாவில், (டிசம்.15) நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நேரில் வந்து, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பூஜை செய்து ஆதரவற்ற மூதாட்டியிடம் அவ்வீட்டை ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வறுமையில் வாடும் கிராம மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த் சில முக்கியமான தகவலை தெரிவித்திருந்தார்.

அதாவது, “நம்முடைய இலக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இலக்கு வருகின்ற 2026 தேர்தலில் தளபதியை அமர வைக்க வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான். அதற்கு நீங்கள் எல்லோரும் உழைக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து சேவை செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் நண்பர்கள் எல்லாம் நாம் மதிக்க வேண்டும் அரவணைக்க வேண்டும். அவர்களோடு நாமும் நம்மோடு அவர்களும் செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தலைவர் தளபதி சொல்கிறதெல்லாம் யார் அன்று முதல் இன்று வரை சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்கு தான் பதவி வழங்கப்படும். கட்சிக்காக யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி, உழைக்காதவர்கள் யாருக்கும் கட்சியில் பதவி கொடுக்கப்படாது. இதில் நம் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார். நமக்கு எல்லாமே தளபதி தான். தளபதியை தாண்டி வேறு எதுவும் கிடையாது.

எனவே, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் புதிதாக வருவார்கள், எல்லோரும் பேசுவார்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள். உங்களுக்கு வேண்டியது தளபதி தலைவர் மட்டும்தான்” என்று கூறியிருந்தார். கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கும் மட்டும்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கப்படும், மற்ற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்கப்பட மாட்டாது என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழக வெற்றி கழகம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *