இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், தான் இந்த காரணத்திற்காக தான் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 1 போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும், பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமென்றால் அடுத்துவரும் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, இன்று நாடு திரும்பிய அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எப்போதும் நான் தூங்கப்போவதற்கு முன்னர் நான் சிறப்பாக விளையாடியது எல்லாம் நினைவுக்கு வந்துபோகும். ஆனால் கடந்த 2 வருடங்களாக அப்படி எதுவும் வரவில்லை. அதனால் நான் அடுத்த பாதையை தேர்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.