அனைவருக்குமே வேலைசெய்யும் இடத்தில் பெஸ்ட் எம்லாயி என்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த பெயரை எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் திறமையாக செய்து முடிக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால், முதலில் நமது உடலில் தெம்பு இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ஆஃபிஸ் செல்வராக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்து பணிபுரிபவராக இருந்தாலும் சரி வேலை என்று வந்துவிட்டால் நேரம் ரொம்ப ரொம்ப முக்கியமானது. தற்போது, இந்த பதிவில் வேலைக்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய உடல்நல மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் சரியாக செய்தாலே பெஸ்ட் எம்லாயி என்ற பெயர் உங்களை தேடி வரும்.
நேரத்தை மிச்சப்படுத்துங்கள்:
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்துவது தான் சவாலான விஷயம். குறிப்பாக, பணியாற்றும் பெண்களாக இருந்தால் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டும். அதனால், முடிந்தவரை காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு தினமும் என்ன மாதிரியான உணவுகளை சமைக்க வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். இது, உங்கள் நேரத்தை மிட்சப்படுத்துவதோடு, ஆரோக்கியமற்ற துரித உணவுகளை (Junk Foods) சாப்பிடுவதை தடுக்க உதவும்.
காலை உணவை தவிர்க்காதீர்கள்:
இன்று பலருக்கும் இருக்கும் பழக்கமே காலை உணவைத் தவிர்ப்பது தான். எல்லா வீட்டு வேலைகளையும் முடிக்க நேரம் கிடைத்த அவர்களுக்கு 10 நிமிடம் அமர்ந்து சாப்பிட நேரம் இல்லாமல் போய்விடுகிறது. அறக்க பறக்க ஆஃபிஸ் கிளம்பிவிடுவார்கள். இப்படி சாப்பிடாமல் இருப்பதால், எப்போதும் சோர்வாகவும், மந்தமாகவும், பசி உணர்வோடும் இருப்போம். இதனால், கொடுத்த வேலையை சரியாக முடிக்க முடியாது.
நாள் முழுக்க எனர்ஜியாக இருக்க காலை உணவு தான் உதவும் என்பதை முதலில் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், காலை உணவை தவிர்ப்பது நொறுக்குத்தீனிகளை அதிகமாக சாப்பிட தூண்டும் இதனால் உடல்பருமன் அதிகரிக்கிறது. எனவே, எக்காரணத்திற்காகவும் காலை உணவை மட்டும் தவிர்க்க வேண்டாம்.
நிறைய தண்ணீர், நல்ல தூக்கம்:
நிறைய தண்ணீர் குடிப்பது நீண்ட நேரம் லேப்டாப், கணினி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் வறட்சி, கண் எரிச்சல், உடல் சூடு ஆகியவற்றைக் குணப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை போக்குவதற்கும் தண்ணீர் உதவுகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8-9 கிளாஸ் தண்ணீர் கட்டாயம் குடியுங்கள். அதேபோல், இரவில் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். நாள் முழுக்க எனர்ஜியாக இருக்க உடல் நீரேற்றமாக இருப்பதோடு கூடவே இரவில் நிம்மதியான தூக்கமும் அவசியம்.
மறக்காமல் யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள்:
உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எனவே, தினமும் கட்டாயம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய வேண்டும். இது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்குவதோடு, உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். சுவாசப் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம் என எதுவாக இருந்தாலும் தினமும் 30 – 45 நிமிடங்கள் கட்டாயம் செய்யுங்கள்.