Mon. Jun 30th, 2025

Pongal Festival 2025 Significance | தமிழர்களின் பொங்கல் பண்டிகையும் சிறப்புகளும்!

தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளம் என்றே சொல்லலாம். அதனால் தான் பொங்கல் பண்டிகையை ‘தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் இந்த பொங்கல் பண்டிகையானது தொடர்ந்து நான்கு நாட்கள் திருவிழா போன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தற்போது, இந்த பதிவில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை தெரிந்துக் கொள்வோம்.

முதல் நாள் போகிப் பண்டிகை

போகிப் பண்டிகையை போகிப் பொங்கல் என்றும் சொல்வார்கள். இது ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகைக்கு முன்னாடி நாளே வீட்டை சுத்தம் செய்து, வர்ணம் பூசி விடுவார்கள். அன்றைய நல்ல நேரம் பார்த்து ஆவாரம் பூ, புழாப்பூ, வேப்பிலை மூன்றையும் சேர்த்து வீட்டு வாசலில் காப்பு கட்டிவிடுவார்கள். மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை தீயில் இட்டு எரிப்பார்கள். கூடவே மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களையும் சேர்த்து தீயில் எரிந்து, வரும் ஆண்டில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

2ஆம் நாள் தைப்பொங்கல்

தமிழ் மாதமான தை 01 ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் விதைத்த நெற்பயிர்களை மார்கழியில் நல்லபடியாக அறுவடை செய்ய உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி கூறவே அதிகாலையில் வீட்டு வாசலில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனை பார்த்து வாழிபாடு செய்வார்கள். இதனால் தைப் பொங்கலை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். வட மாநிலங்களில் இப்பண்டிகையை ‘மகர சங்கராந்தி’ என்று கொண்டாடுவார்கள்.

3ஆம் நாள் மாட்டுப் பொங்கல்

நெற்பயிர்களை நல்ல முறையில் அறுவடை செய்ய உதவியாக இருந்த கால்நடைகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக தை 02 ஆம் தேதி கொண்டாடப்படுவதே மாட்டுப் பொங்கல். அன்றைய தினமும் வீட்டில் உள்ள காளை மாடு, ஆடு ஆகியவற்றை குளிக்க வைத்து மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து, பின்னர் நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைத்து அவற்றிற்கு படைத்து வழிபடுவார்கள். சில இடங்கள் இப்பண்டிகையை பட்டிப்பொங்கல் என்றும் சொல்வார்கள்.

4ஆம் நாள் காணும் பொங்கல்

தை 03 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும். காணும் பொங்கலன்று சொந்த பந்தங்களை வீட்டிற்கு அழைத்து அசைவம் சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வார்கள். இதனால் சில ஊர்களில் இப்பண்டிகையை கரிநாள் என்று சொல்வார்கள். மேலும், இந்த நாளில் தான் கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம், கோலப்போட்டி, உரி அடித்தல், வலுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *