ஆஸ்துமா என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி நோயாகும். இதனால், சுவாப்பதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இருமல், மூச்சுத்திணறல், சளி மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகளாகும். அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றன. கூடவே, ஆஸ்துமா பற்றிய பல கட்டுக்கதைகளும் பரவி வருகின்றன. இதனால், ஆஸ்துமாவின் தீவிர தன்மை பற்றி பலருக்கும் தெரியாமல் போகலாம். தற்போது, இந்த பதிவில் ஆஸ்துமா குறித்து பலரும் நம்பிக் கொண்டிருக்கும் 5 பொதுவான கட்டுக்கதைகளையும், அதன் உண்மையையும் தெரிந்துக் கொள்வோம்.
கட்டுக்கதை 1: ஆஸ்துமா பரவக்கூடியது
ஆஸ்துமா குறித்து பலரும் நம்பிக் கொண்டிருக்கும் முக்கியமான கட்டுக்கதையே இதுதான். உண்மையில், ஆஸ்துமா பரவக்கூடிய நோய் அல்ல. இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவாது.
கட்டுக்கதை 2: மூச்சுத்திணறல் இல்லை என்றால், அது ஆஸ்துமா அல்ல
மூச்சுத்திணறல் என்பது ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறியாகும். இது ஒரு குறுகிய காற்றுப்பாதை வழியாக காற்று செல்வதால் விசில் சத்தத்தை ஏற்படுத்தும். சிலருக்கு மூச்சுத்திணறல் பொதுவாகக் கேட்கக்கூடியதாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நிலைமை மோசமாகும்போது, அதை ஸ்டெதாஸ்கோப் மூலம் மட்டுமே கேட்க முடியும்.
கட்டுக்கதை 3: ஆஸ்துமா உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது
உடற்பயிற்சி செய்வது ஆஸ்துமாவின் அறிகுறிகளை மோசமாக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் உண்மை என்னவென்றால், உடல் செயல்பாடுகள் உங்களையும் உங்கள் நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இருப்பினும், உடல் செயல்பாடுகள் சிலருக்கு ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டலாம். அவர்கள் அல்புடெரோல் இன்ஹேலரை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
கட்டுக்கதை 4: மாற்று சிகிச்சை மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியும்
பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் திறம்பட நிர்வகிக்க முடியுமே தவிர, ஆஸ்துமா நிரந்தரமாக குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. அதாவது, சில மாற்று சிகிச்சைகள் சில நபர்களுக்கு அறிகுறிகளை கட்டுப்பத்த உதவுலாம். இருப்பினும், ஆஸ்துமாவிற்கு உண்டான மருத்துவ சிகிச்சைகளை மாற்றக்கூடாது. எனவே, புதிய சிகிச்சைகளை முயற்சிக்கும் முன்பு மருத்துவரை அணுகவும்.
கட்டுக்கதை 5: ஆஸ்துமா ஒரு தீவிர நோய் அல்ல
பலரும் ஆஸ்துமாவை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்வது கிடையாது. ஆனால், ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட, குணப்படுத்த முடியாத நோயாகும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ஆஸ்துமாவின் அறிகுறிகள் மோசமடைந்து மரணத்தையும் ஏற்படுத்தும். ஆனால், மரணம் என்பது அரிதாகவே நிகழ்கிறது. இருப்பினும், கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள் மோசமான அறிகுறிகளை அடையாளம் கண்டு, தடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.