சர்க்கரை நோய் இருப்பவர்கள் பழங்களை சாப்பிடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுத்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு அது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு பழங்களில் உள்ள கிளைசிமிக் குறியீடு தான் காரணம். அதிக கிளைசிமிக் எண் கொண்ட பழங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
மாம்பழத்தில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்து நிரம்பியுள்ளன. கூடவே, இயற்கை சர்க்கரையும் அதிகமாக உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக, பழுத்த மாம்பழம் ரொம்ப இனிப்பாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை வேகமாக உயர்த்தம். எனவே, இரண்டு முதல் மூன்று துண்டுகள் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் அன்னாசி சாப்பிடலாமா?
அன்னாசி பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடும்போது எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், சுவையாக இருக்கிறது என்று அளவுக்கு மீறி சாப்பிட்டுவிட்டால் இரத்த சர்க்கரை எல்லையை தாண்டிவிடும். பிரச்சனை உங்களுக்கே. எனவே, ஒரு நாளைக்கு 1 பீஸ் போதுமானது.
சர்க்கரை நோயாளிகள் திராட்சை சாப்பிடலாமா?
திராட்சை பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே, திராட்சையை சாப்பிடும்போது சர்க்கரை நோயாளிகள் கவனத்தோடு இருக்க வேண்டும். ருசியாக இருக்கிறது என்று அளவுக்கு மீறி சாப்பிட்டு விடாதீர்கள். இது இரத்த சர்க்கரையை எக்கச்சக்கமாக அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணியில் லைகோபீன் போன்ற முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் இதை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. இது இரத்த சர்க்கரையை அதிகரித்து, நீரிழிவு நோயின் தீவிரத்தை மோசமாக்கும்.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?
வாழைப்பழத்தில் அதிகப்படியான கிளைசெமிக் குறியீடு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அதிகமாக சாப்பிடக் கூடாது. குறிப்பாக, நன்றாக பழுத்த வாழைப்பழத்தை தொடவேக் கூடாது. அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். ஒருவேளை வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஓரளவு காயாக இருக்கும்போது சாப்பிடுங்கள். அதில் சர்க்கரை அளவு கம்மியாக தான் இருக்கும்.