நம்மை தாக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாப்பதே கல்லீரல் தான், அதை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால், நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாது. இதனால், பல மோசமான உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, இனியாவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்களே கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும் பழங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மாதுளை
மாதுளம் பழம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. வாரத்தில் ஒருமுறை மாதுளம் பழத்தை சேர்த்துக் கொள்வதால், கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
திராட்சை பழம்
திராட்சைப்பழத்தில் குறிப்பாக ஊதா மற்றும் சிவப்பு நிற திராட்சையில், இயற்கையாகவே கல்லீரலை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருக்கின்றன. இவை, கல்லீரலில் ஹெபாடிக் ஃபைப்ரோஸிஸ் என்ற திசு வளர்ச்சியை குறைக்க உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது திராட்சை பழம் அல்லது ஜூஸை சாப்பிடுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி6 ஆகியவை ஏராளமாக இருக்கின்றன. இது கல்லீரலில் ஏற்படும் நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது வயிற்றில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால், நச்சுக்கள் வெளியேறி கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
அவகேடோ
அவகேடோவில் கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் குளுதாதயோன் என்ற ஆக்ஸிஜனேற்ற கூறு உள்ளது, அது உடலில் உள்ள அனைத்து வகையான நச்சுக்களையும் வடிகட்ட உதவுகிறது. எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது அவகேடோ பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வெறுமனே சாப்பிட்டாலும் சரி, ஸ்மூத்தி செய்து சாப்பிடாலும் சரி கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பைரோலோகுவினோலின் குயினோன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடலில் இருந்து நச்சுகளை அகற்றுகிறது. எனவே, இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பப்பாளி பழத்தை வெறுமனே அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.