உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும், பெரும்பாலானோர்களுக்கு கால்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால், அடிக்கடி தசைப்பிடிப்புகள், வீக்கம், நரம்புகளில் வலி, கால் வலி, மூட்டு வலி போன்றவற்றை அனுபவிக்க வேண்டியிருக்கும். யோகா செய்வதன் மூலம் கால்களில் இயற்கையாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகா ஆசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
உட்கடாசனம்
இந்த ஆசனம் செய்வதால், உடலில் குறிப்பாக கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கால் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தை விரைவாக குறைக்கிறது. மூட்டு வலி படிப்படியாக குறைந்துவிடும். காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் 2 நிமிடங்கள் செய்தால் போதும்.
மர்ஜரியாசனம் – பிட்டிலாசனம்
முதுகெலும்புகளுக்கு இடையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது. மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வலியை நீக்குகிறது. அதுமட்டுமல்லாமல், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை மேம்படுத்துகிறது.
விப்ரித் கர்னிகாசனம்
இந்த விப்ரித் கர்னிகாசனம் (லெக்ஸ் அப் தி வால் போஸ்) நுரையீரலில் இருந்து இதயம் மற்றும் பிற உடல் பாகங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. கால் மற்றும் பாதங்களில் வலியை போக்குகிறது. தினமும் இந்த ஆசனத்தை செய்வதால், மன அழுத்தம் குறைவதோடு, கீழ் முதுகுவலியைக் குறைக்க உதவுகிறது.
அதோ முக ஸ்வனாசனம்
இந்த ஆசனம் தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தலைவலி, சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மையை போக்குகிறது. கை, கால்கள் வலுபெறும் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
சேது பந்தசனம்
சேது பந்தசனம் முதுகின் தசைகளை, குறிப்பாக முதுகெலும்பை வலுப்படுத்துகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்துவர உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால், உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதனால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.