“என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்” என்று, பிரபல நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சண்டைக் காட்சிகளில் கொடிக்கட்டி பறந்தவர் தான் ஜாக்குவார் தங்கம். சில படங்களில் முக்கிய வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அத்துடன், தமிழ் சினிமா உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராகம் ஜாக்குவார் தங்கம் பணியாற்றி இருக்கிறார்.
அதே நேரத்தில், ஜாக்குவார் தங்கம் கடந்த 1984 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்தார். தற்போது, நடிகர் ஜாக்குவார் தங்கம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில் தான், சாந்தி தனது கணவர் ஜாக்குவார் தங்கம் மீது சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அந்த புகார் மனுவில், “23 வயது இளம் பெண் ஒருவருடன் எனது கணவர் ஜாக்குவார் தங்கம் தவறான உறவில் இருந்து வருகிறார் என்றும், சமீப காலங்களில் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்து, எங்களுடன் தினமும் சண்டையிட்டு வருவதாகவும்” குற்றம்சாட்டி உள்ளார்.
“அதன் தொடர்ச்சியாகவே 15 ஆம் தேதியான நேற்று அந்தப் பெண்ணை அழைத்து வந்து, என்னையும் தனது மகன்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகவும்” சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதனால், “எனது கணவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள 23 வயது இளம் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, திருமணத்தைத் தாண்டிய உறவு காரணமாக, திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.