Mon. Jun 30th, 2025

“காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள்!” ஆளுநருக்கு அமைச்சர் அறிவுரை..

“மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள் ஆளுநரே” என்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கி உள்ளார்.

இது குறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். “காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?” என்று, அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது. அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால், ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” எனவும் கேட்டிருக்கிறார் ஆளுநர். 1947 ஆகஸ்ட்15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது, திராவிட கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, ‘சுதந்திர தினம் இன்பநாள்’ என சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார். அந்த அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேச பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள்” என்றும், அவர் காட்டமாகவே பதிலடி கொடுத்து உள்ளார்.

குறிப்பாக, “காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுநருக்கு தெரியும்தானே!?” என்றும், அவர் காட்டமாகவே கேள்வி எழுப்பி உள்ளார்.

அத்துடன், “இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல, இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமும் என்பது வரலாறு. மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. `காந்தி’ என்ற திரைப்படத்திற்குப் பிறகே தெரிந்தது’ என சொல்லி காந்தியை சிறுமைப்படுத்திய போது ஆர்.என்.ரவி எங்கே போனார்?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆளுநர் ரவி கண்டித்திருக்கிறாரா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்” என்றும், ஆளுநருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை வழங்கி உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *