“சீமராஜா” படத்தின் வில்லன் நடிகர் மீது நட்சத்திர ஓட்டலில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த நடிகர் ரிஷிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார்.
நடிகர் ரிஷிகாந்த், நேற்று இரவு சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு, அவரது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ஓட்டலுக்குள் சென்றாக கூறப்படுகிறது.
அப்போது, மது போதையில் இருந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர், நடிகர் ரிஷி காந்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, நடிகர் ரிஷி காந்த்தை திடீரென்று ஆபாசமாக திட்டி, தாக்கியதில் கண்ணில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, நடிகர் ரிஷி காந்த் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார்.
இதனையடுத்து, நடிகர் ரிஷி காந்த் இன்று காலை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அந்த புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் நடத்திய ஹரீஷை, போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். இந்த தாக்குதலால் சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஹரீஷ் கார் ஷோரூமில் பணியாற்றி வருகிறார் என்பதும், சம்பவதன்று அவர் பெண் ஒருவருடன் நடனமாடி கொண்டிருந்ததாகவும், இதைப் பார்த்து நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் பார்க்காங்கில்
தனது காரை எடுப்பதற்காக, ரிஷிகாந்த் சென்ற போது தான், அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தற்போது தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம், சினிமா வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.