பாஜக தலைமையிலான மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்..
“மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
“நிதி தருவதில் பாரபட்சம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். Tamilnadu will never bow to Central Government’s hegemony” மேலும், அஜித்தின் அட்டகாசம் பட காமெடியை நினைவூட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார்.
ராமதாஸ், பாமக நிறுவனர்
“மீண்டும் ஒரு போராட்டத்தை தூண்டாதீர்”
திருமா வளவன், விசிக தலைவர்
“PMShri பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வந்தால், மாணவர்கள் 3 மொழிகள் கற்க வேண்டும். இதன் மூலம், இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இந்தித் திணிப்பு நடைபெறும் என்பதே உண்மை”
சீமான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்
“இது சர்வாதிகாரம் என்று சொல்லமுடியாது, கொடுங்கோன்மை. இந்தி எதற்காக தேவை?” என்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்
“வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர். அவர் பெயர் தர்மேந்திரா. ஆனால், எந்த தர்மமும் இல்லாதவர் அவர். நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார்.
சண்முகம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்
“மத்திய அரசு தொடர்ந்து இதே போன்று செயல்பட்டால், மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்று, வலியுறுத்தி உள்ளார்.
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
“மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். நம் முன் அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று, சூளுரைத்தார்.
ராஜ்மோகன், தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர்
“தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள்”
இதனிடையே, “இந்தி திணிக்கப்பட மாட்டாது. தமிழக பள்ளிகளில் மூன்றாவது மொழி ஆர்வம் குறித்து, மக்களை வீடு தேடிச்சென்று கணக்கெடுப்பு நடத்தி, குடியரசுத் தலைவருக்கு அறிக்கையாக கொடுக்க உள்ளோம். அத்துடன், மார்ச் 1 முதல் மே மாதம் வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்” என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.