முன்னதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் “உங்கள் வீட்டை பாஜக வினர் முற்றுகையிடுவதாக வால்போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதாக” கேள்வி கேட்டார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “வீட்ட முற்றுகையிடனுமுனா வர சொல்லுங்கள். நான் வீட்டுலதான் இருப்பேன். வால்போஸ்ட் ஒட்டுறது எல்லாம் ஒரு சாதனையா? இன்னக்கி நிகழ்ச்சி இருக்கு.. முடிந்தால் அவரை அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்கள்” என்று, அவர் சவால் விடுத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “GetOut மோடியா? GetOut ஸ்டாலினா?” என்று, கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணா சாலையில எங்க வரணும்னு தேதி, நேரம், இடம் குறிக்க சொல்லுங்க. நான் தனியாளா வர்றேன். என்னை தடுத்துப் பாருங்கள் பார்க்கலாம்” என்று, உதயநிதி ஸ்டாலின்க்கு அண்ணாமலை சவால் விடுத்தார்.
மேலும், “தரமில்லாத ஒரு அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின் என்றும், எங்ககிட்ட வாங்கக்கூடிய வரியில் தான் அரசுப்பள்ளியில் இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன” என்றும், அண்ணாமலை சரவெடியாக வெடித்தார்.
தொடர்ச்சியாக, திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் “GetOutStalin” என்ற ஹேஷ்டேக்கை அண்ணாமலை பதிவிட்டார். இதனை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், திமுக இளைஞர் அணியின் மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டமானது துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேடைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த போது, திமுக இளைஞரணி நிர்வாகிகள் “கெட் அவுட் மோடி, கெட் அவுட் மோடி” என்று, கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல், “கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே” என்று, அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்து உள்ளார்.
குறிப்பாக, “தெம்பு இருந்தால் அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும்” என்றும், அண்ணாமலைக்கு சேகர் பாபு சாவல் விடுத்து உள்ளார்.
இதனிடையே, “ஒன்றியத்துலயும் – மாநிலத்திலயும் ஆட்சியை வெச்சுகிட்டு திமுகவும், பாஜகவும் Tag war நடத்திகிட்டு இருக்காங்க.
எப்படியும் கமலாலயம் பக்கமோ இல்ல அறிவாலயம் பக்கமோ இரண்டு கும்பலும் போகப்போறது இல்ல. பேசாமல், இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே PubG இல் சண்டை போடுங்க.
ஓரமா போய் விளையாடுங்க பா!” என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் உள்ளிட்ட தவெக தொண்டர்கள் இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்து நக்கல் அடித்து வருகிறார்கள்.