நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நலக்குறைவால் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் இன்று தனது மகன்களுடன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முந்தி அடித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “அனைத்து சமுதாய மக்களுக்குமானவன் நான் என்றும், கொளுத்தும் வெயிலில் தன்னந்தனியாக என் கை காசுகளை செலவழித்து போராடுகிறேன்” என்றும், பேசினார்.
அத்துடன், “எனது சின்னம் பலாப்பழம் என்றும், இந்த பலா சுவை போன்று, உங்களுக்கு நான் இனிப்பாக வேலை செய்வேன் என்றும், இங்கு இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பேன்” என்றும் கூறினார்.
“பாலாறுகளில் தண்ணீர் வரச் வழிச் செய்வேன் என்றும், அன்பின் அடிமையாக மக்களுக்கு நான் என்றும் வேலை செய்வேன்” என்றும், உருகி பேசினார்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர் தொகுதியில் சற்று கடுமையான வெயில் அடித்து வருகிறது. அப்போது, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மன்சூர் அலிகானுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடடினாயக அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.