நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார்.
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக” சென்னை வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீமன்றம், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், அதேப் போன்று 12 வாரத்துக்குள் போலீசார் இந்த வழக்கை விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்றைய தினம் சென்னை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்த புதிய ஆதாரங்களை சேகரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சீமான் கைதாக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் அடிப்பட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில்,“இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும், சீமான் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதேப் போன்று, “இவ்வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றும், சீமான் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.