அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு 6 மாதகாலத்திலேயே வகுப்பறை மேல் தளப்பூச்சி பெயர்ந்து விழுந்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 2023 -2024 ஆம் நிதியாண்டில், ஊரக வளர்ச்சி மற்றும், உள்ளாட்சித் துறை சார்பில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், வகுப்பறைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், அந்த பள்ளியின் வகுப்பறையில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 33 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இன்று வகுப்பறையில் மாணவர்கள் பாடம் பயின்றுக்கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேல் தளப்பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்து உள்ளது.
இதில், அந்த வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் பிரனீத், 3 ஆம் வகுப்பு சுதர்சன் மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவன் விஷேக் ஆகியோர் மீது அந்த கட்டடத்தின் சிமென்ட் பூச்சி விழுந்து உள்ளது. இதில் அந்த 3 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
மூன்று மாணவர்களும் படுகாயமடைந்த உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சையிற்காக, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, பள்ளியில் விபத்து ஏற்பட்டது குறித்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்க்கொண்டனர்.
அதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன் ஆய்வு செய்து பள்ளி தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், பொறியாளர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின் இந்த கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டிடத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், பள்ளி கட்டடம் கட்டப்பட்டு திறந்த வெறும் ஆறு மாத காலமே ஆன நிலையில், பள்ளியின் வகுப்பறை கட்டிட மேல்தளப்பூச்சி இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.