திருமயம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்களம் கிராமத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் அத்தை மகனான முத்துக்குமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், முத்துக்குமாரும் அந்த மாணவியும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல்பொனில் பேசி வந்த நிலையில், ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முத்துக்குமார், சொந்த ஊருக்கு வந்து உள்ளார். அப்போது, முத்துக்குமார் சம்பந்தப்பட்ட மாணவியுடன் நெருங்கி பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், அந்தப் பெண் முத்துக்குமாரை தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியதை தொடர்ந்து, முத்துக்குமார் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததோடு, தந்த பெண்ணிடம் பேசுவதையும் அப்படியே நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்திருந்து உள்ளார்.
இந்நிலையில், முத்துக்குமாருக்கு நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவி தனக்கு நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி, முத்துக்குமார் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், “முத்துக்குமார் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உறவு வைத்துக் கொண்ட பின் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், அதனால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனை அடுத்து, திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முத்துக்குமார் கல்லூரி மாணவியை ஏமாற்றியது தெரிய வந்ததை தொடர்ந்து, முத்துக்குமாரை அழைத்து சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அத்துடன், கல்லூரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறியதை முத்துக்குமார் ஏற்க மறுத்ததால், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் முத்துக்குமாரை கைது செய்து திருமயத்தில் உள்ள மாவட்ட உரிமைகள் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்துக் கொண்டு, பின்னர் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.