நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக” நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ள கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் நேற்று தனது மகன்களுடன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முந்தி அடித்தனர். இதனையடுத்து, எப்போதும் போல் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைத்து சமுதாய மக்களுக்குமானவன் நான் என்றும், கொளுத்தும் வெயிலில் தன்னந்தனியாக என் கை காசுகளை செலவழித்து போராடுகிறேன்” என்றும், நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்தார்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர் தொகுதியில் சற்று கடுமையான வெயில் அடித்து வருகிறது. அப்போது, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மன்சூர் அலிகானுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடடினாயக அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்சூர் அலிகான் தற்போது பரபரப்பனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ போனேன். உடனே மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி ஏற்பட்டது. உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கு Treatmet குடுத்தும் வலி நிக்கல.
உடனடியாக, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, K.M. நர்ஸிங் ஹோம் க்கு ஆம்புலன்ஸ்ல சேர்த்திருக்காங்க. எனக்கு தற்போது டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ ல அட்மிட் பண்ணி சிகிச்சை அளித்து வருகிறார். இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2′ மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்” என்றும் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இவ்வாறாக மன்சூர் அலிகான், தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்!
இதன் மூலம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக பேசப்படுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.