தர்மபுரியில் யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழக வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்னுமிடத்தில் மார்ச் 1 ஆம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த யானை, தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை அழிப்பதற்காகவே, அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தான், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்மபுரி மாவட்ட வன அதிகாரி ராஜங்கம், காணொலி மூலம் ஆஜராகி, யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 குழு அமைக்கப்பட்டு, இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருவரிடம் இருந்து டெட்னேட்டர் வெடிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக விளக்கமளித்தார்.
அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கை படித்த பார்த்த நீதிபதிகள், ஆரம்ப கட்டத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்கும், இந்த அறிக்கைக்கும் பல்வேறு முரன்பாடுகள் இருப்பதாகவும், அறிக்கையில் விசாரணை விவரங்கள் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை விரிவான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.