Mon. Jun 30th, 2025

“அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் ” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.  சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரனை மேற்க்கொள்ளும் படியும், இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு இருந்ததும், பின் மேலும், 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க இருப்பதாக கூறி, அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீடாக 3 லட்ச ரூபாயை 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *