“ஆயாவா? அவ்வையாரா?” என்று, சட்டப் பேரவையில் அவ்வையாரில் பெயரில் எழுந்த சர்ச்சையால், “ஒளவையார் விவாதத்தின் மூலம் அவ்வை யார்? என்று, இப்போது தெரிந்தது” என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலாக பேச சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, “வேதாரண்யம் தொகுது துளியாப்பட்டினத்தில் ஒளவையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க முன்வருமா? என்று, வேதாரண்யம் சட்ட மன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அதாவது, “அவ்வையின் வாக்கு அமுதமானது, சிக்கனச் சொற்கள் சமூக அக்கறையாக திகழ்ந்தவை, ஆத்திச்சூட்டி உள்ளிட்ட பல பாடல்களை பள்ளிச் சிறுவர்களுக்காகவே பாடியுள்ளார். வேதாரண்யம் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அவ்வையாருக்கு கோயில் இருக்கும் ஒரே ஊர். மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அறிவுக்களஞ்சியம் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்று, – ஓ.எஸ். மணியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சாமிநாதன் “நிதி நிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு அரசு பரிசீலனை செய்யும்” என்றார்.
அதற்கு, “கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் புத்தகங்களை வைத்தாலே போதும். இதில் நிதிப்பிரச்னை எழவில்லை. அறம் செய்ய விரும்பு தொடங்கி, அருமையான அற்புதமான பாடல்களை படைத்த அவ்வையாரின் புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும்” என்று, ஓ எஸ் மணியன் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஓ எஸ் மணியன், “எங்கள் ஊரில் கோயில் வைக்கப்பட்டிருக்கிற, மணிமண்டபம் அமைக்கப்படும் அவ்வையாருக்கு தான் அறிவுக்களஞ்சியத்தை இங்கே வையுங்கள்” என்று, பதில் அளித்தார்.
“ஐந்து அவ்வையார் இருக்கும் போது வேதாரண்யத்தில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி” என்று, சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டார்.
அதற்கு, “ஒரு காலத்தில் பாடல் பாடிய எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக தான் சொல்லப்படுகிறது” என்று, ஓ எஸ் மணியன் பதில் அளிக்க, “நம்ம வீட்டில் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா?” என்று, அமைச்சர் துரைமுருகன் நக்கலாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு “இதுவரை அனைவரும் அவ்வையார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது தான் அவ்வை யார்? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. அவ்வையார் என்பது பெண் இனத்திற்கு ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே, விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.