காதலியை பெண் கேட்க சென்றவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காதலியை மீட்டுத் தர கோரி காதலன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேனட்ராயன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பது மகள் 23 வயதான பிரியதர்ஷினி, இவரும் திருவோணம் அருகே உள்ள ஆனந்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது மகன் 25 வயதான ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்து உள்ளனர்.
இதனிடையே, இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக பிரியதர்ஷினியை அடித்து துன்புறுத்தி கொடூரமாக தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரியதர்ஷினி வீட்டிற்கு ஜெயபிரகாஷின் தாயார் மீனாட்சி, மற்றும் அவரது அண்ணன் வீரக்குமார் இருவரும் பெண் கேட்டு பிரியதர்ஷினி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது, பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது சித்தப்பா பாலையா, கண்ணப்பா ஆகியோர் சேர்ந்து பெண் கேட்டு வந்தவர்களே இரும்பு கம்பி ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த வீரக்குமார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வீரக்குமார் திருவோண காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் ஜெயபிரகாஷ் தனது காதலியை மீட்டுத் தர வேண்டி புகார் கொடுத்தார். இந்த புகாரில் “எனது காதலி பிரியதர்ஷினி நானும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இதில், பிரியதர்ஷினி என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளார்.
எங்கள் காதலுக்கு எனது தாய் ,தந்தையும் முழு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரியதர்ஷினியின் தந்தை அவரது சிறிய தந்தை மற்றும் பிரியதர்ஷினி குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, அந்தப் பெண்ணை எரித்துக் கொன்று விடுவதாக கூறி, அவரது வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றனர்.
இதனால், பிரியதர்ஷினி யை மீட்டு தர தாருங்கள்” என்று, அவர் புகார் அளித்து உள்ளார்.
இதனிடையே, திருவோணம் அருகே காதலித்த பெண்ணை மீட்டு தர கோரி காதலன் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.