பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 வயது பெண்மணி ஒருவர் தனது கணவரை பிரிந்து 2 பெண் குழந்தைகளுடன் சென்னை, கொளத்தூர் பகுதியில் வசித்துக் கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேற்படி பெண் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரில், யாரோ, தனது புகைப்படத்தையும், தனது தங்கை மற்றும் தாயாரின் புகைப்படத்தையும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான கணக்குகள் உருவாக்கி, மணமகன் தேவை என்று பதிவிட்டும், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேற்படி நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய வினோத்குமார், வ/34, த/பெ.ஆறுமுகம், சாமூண்டீஸ்வரி நகர் 1வது தெரு, செம்பியம், திரு வி.க.நகர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி வினோத்குமார், புகார்தாரரான பெண்ணின் கணவருடடைய நண்பர் என்பதும், புகார்தாரர் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது, இரு குடும்பத்தாரும் நன்கு பழகி வந்த நிலையில், புகார்தாரர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரிந்து, எதிரி வினோத்குமார் புகார்தாரரிடம் நீ தன்னிடம் மட்டும்தான் பேச வேண்டும், வேறு யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டியபோது, புகார்தாரர் வினோத்குமாருடன் பேசாமல் தவிர்த்து வந்ததால், வினோத்குமார் புகார்தாரரை பழி வாங்குவதற்காக அவரது புகைப்படங்களை சித்தரித்து சமூக வலைளதத்தில் பதிவிட்டும், புகார்தாரரின் உறவினருக்கும் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி வினோத்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.