“மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்தில் பெண் குழந்தையை தவற விட்டுச்சென்ற பெற்றோரால் பரபரப்பு”. பேருந்து அரைமணி நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் பதற்றத்துடன் திரும்ப வந்த பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு:-
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் அரசுப்பேருந்து பந்தநல்லூர் புறப்பட்டது. அப்போது பேருந்தில் இரண்டரை வயது பெண் குழந்தை தனியாக இருப்பதாக நடத்துநர் மாதவனிடம் பயணிகள் கூறியதால், பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்த பேருந்து மீண்டும் பேருந்து நிலையத்துக்குள்ளேயே வந்து அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது.
கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் குழந்தையை அழவிடாமல் சாக்லேட் கொடுத்து குழந்தையை பார்த்துக்கொண்டனர். இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே குழந்தையை தேடிக்கொண்டு பெற்றோர் பதற்றத்துடன் ஆட்டோவில் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், பேருந்தில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை சோமு குழந்தையை பேருந்து சீட்டில் அமர வைத்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்து வருவதற்காக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது பேருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதால், பேருந்தை காணாமல் பதறிய பெற்றோர்; ஆட்டோவை பிடித்துக்கொண்டு குழந்தையை தேடிச் சென்றனர். சுமார் 5 கிலோமீட்டர் வரை சென்ற பெற்றோர் அங்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து கேட்டபோது, அவர்கள் விசாரித்துவிட்டு, குழந்தை பேருந்து நிலையத்தில் பத்திரமாக உள்ளதாக தெரிவித்ததாகவும், இதையடுத்து பேருந்து நிலையத்துக்கு திரும்ப வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் குழந்தை குறித்த அடையாளத்தை கேட்டு அறிந்தகொண்ட பின்னர் அவர்களிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.