Tue. Jul 1st, 2025

என்ன நடக்குது? டாஸ்மாக் வழக்கு.. 2 நீதிபதிகள் விலகுவதாக அறிவிப்பு..!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில்மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் அறிவித்து உள்ளனர். இதனால், நீதிமன்றத்தில், நீதி வழங்கும் விசயத்தில் திரை மறைவில் என்ன நடக்கிறது என்றுத் தெரியாமல் பொது மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *