வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஓடிச்சென்று ஏறிய விவகாரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, ஆம்பூர் பணிமனை கிளைமேலாளர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தேர்வு காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு பேருந்து கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து ஓடிய மாணவி அரசு பேருந்து ஏறி சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, இன்று காலை தேர்வுக்காக காத்திருந்த மாணவியை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசனிடம் விளக்கம் கேட்கபட்பட்டது.
அதற்கு அவர், “வாணியம்பாடியிலிருந்து, ஆலங்காயம் நோக்கிச்சென்ற 1C அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜிடம் கொத்தக்கேட்டை பகுதியில், பள்ளி மாணவி ஏற முயன்ற போது, மாணவியை ஏற்றாமல் வேகமாக சென்றது குறித்து உரிய விசாரணை மேற்க்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நடத்துனர், அசோக்குமார், பணியில் இருந்து விடுவித்து, ஆம்பூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.