2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சரியாக இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் குட்டை கலங்கத் தொடங்கி இருக்கிறது. முடிந்தவரை ஆதாயம் பார்க்க குட்டிக் கட்சிகள் முட்டிப் பார்க்கும். எங்கு கூடுதல் இடம் கிடைக்கிறதோ> அங்கு தாவும்படலம் கூச்சமின்றி நடக்கும். அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த இலங்கைதாவுதல் (குரங்கு வேலை) நடைபெற வாய்ப்புஉள்ளது.
அப்படி யார், எங்கு கலகக்குரல் எழுப்பி உள்ளனர் என்று பார்ப்போமா..? இந்த கலகக் குரல்கள் இரண்டு விதத்தில் பேரம் பேச பயன்படும். அதாவது இருக்கின்ற கூட்டணிக்குள் கூடுதல் இடங்களை பெறுவது முதல்பாணி, எதிர்முகாமுக்கு தாவுவது இரண்டாவது பாணி.. அதற்கு முதலில் கம்பு சுற்ற வேண்டும். ஒருசிலர் கம்பு சுற்ற ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன்னர் யார், யார் எந்தெந்த கூட்டணியில் இருக்கின்றனர்(!) என்ற பட்டியலைப் பார்த்து விடுவோம்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, காதர் மொகிதீனின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, கதிரவனின் பார்வர்டு ப்ளாக், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அதியமானின் ஆதித் தமிழர் பேரவை, முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவை இடம்பெற்று இருந்தன.
திமுக கூட்டணியில் இரண்டு கலகக் குரல்கள் வெளிப்படையாக கேட்க ஆரம்பித்து விட்டன. ஒன்று தமிழக சட்டப்பேரவைக்குள்ளேயே வெடித்துச் சிதறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஜி.வேல்முருகனின் குரல். எந்த ஆயுதத்தை எடுத்தால் திமுகவால் மறுத்துப் பேசமுடியாதோ அதே தமிழை கேடயமாக்கி வாள்சுழற்றி இருக்கிறார் இந்த இளம்புயல்(அப்படித்தான் அவரை அழைத்தார்கள்).
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, வேல்முருகன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதை பார்க்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கழகம், தனக்கான புதிய பாதையை கண்டடைந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவையும் சேர்த்தே எதிர்த்து பேசி இருப்பதால் வேல்முருகன் அங்கும் செல்லப்போவதில்லை. எஞ்சி இருப்பது பாஜக கூட்டணி அல்லது நடிகர் விஜயின் தவெக. பண்ருட்டி பலாப்பழம் டெல்லியில் விற்பனையாக அதிக வாய்ப்பு என்றே தெரிகிறது.
கொசுறுச் செய்தி – தமிழக வாழ்வுரிமைக் கழகத்தை ஆங்கிலத்தில் tvkparty என்று குறிப்பிட்டு வந்தார்கள். சமீபத்தில் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகம் தமிழில் தவெக என்றும் ஆங்கிலத்தில் tvk என்றும் அனைத்து ஊடகங்களாலும் குறிப்பிடப்படுகிறது. 2012-லேயே நான் கட்சி ஆரம்பித்து விட்டேன், ஆனால் நேற்று ஆரம்பித்த கட்சியை தனது கட்சியின் பெயரால் குறிப்பிடுவதா? என்று வேதனையில் உள்ளாராம் வேல்முருகன்..
அடுத்ததாக குட்டையை கலக்குவது யார் என்று பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கூறலாம். அதுவும் அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக சண்முகம் வந்தபிறகு கழகத்திற்கு எதிரான கலகக்குரல் அதிகமாகவே ஒலிக்கிறது. சாம்சங் ஊழியர் விவகாரத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது திமுக அரசை வெளிப்படையாக சாடியது மார்க்சிஸ்ட். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மார்க்சிஸ்ட் நினைவுப்படுத்தி பேசியதை திமுக தலைமை விரும்பவில்லை. கடலூரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மாநிலச் செயலாளர் சண்முகமே போராட்டம் நடத்தி கைதாகி உள்ளார்.
இந்த உரசல் இரண்டு விதத்தில் பயன்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 6 இடங்கள் மட்டுமே மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தமுறை அதனை 10-ஆக உயர்த்தித் தர மார்க்சிஸ்ட் அடம் பிடிக்கலாம். அதிமுக கூட்டணியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தூதும் விடலாம். அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் ஏற்கனவே இருந்துள்ளதால், இந்த தூது ஒன்றும் புதிதல்ல. பாஜக உடன் அதிமுக முரண்டு பிடித்து வருவதால் அதனைக் காரணம் காட்டி மதச்சார்பற்ற அணியில் நாங்கள் இடம்பெறுகிறோம் என்று மார்க்சிஸ்ட் சொல்லிக் கொள்ளலாம். மார்க்சிஸ்ட் எவ்வழியோ, அவ்வழியே இந்திய கம்யூனிஸ்ட் என்று அறிக.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை ஏற்கனவே அது குட்டியை விட்டு ஆழம் பார்த்து விட்டது. ஒன்றும் தேறாது என்று தெரிந்ததால் தான் ஆதவ் அர்ஜுனா சுவரேறி குதித்து வெற்றிக் கழகம் நோக்கி ஓடிவிட்டார். அமைதியாக இருப்பது தான் கடந்தமுறை கிடைத்த 6 இடங்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு என்பதால் வேங்கைவயல் முதல் எல்லா விஷயத்திலும் அமைதி காக்கிறது சிறுத்தை.
இப்போதைக்கு திமுக கூட்டணியில் கம்பு சுற்றுவது இந்த மூன்று கட்சிகள் தான். அறிவாலயத்திலேயே இவர்கள் நீடிப்பார்களா? எம்ஜிஆர் மாளிகைக்கு தாவுவார்களா? என்பது அடுத்தடுத்த மாதங்களில் தெரிந்து விடும்…
அரசியல் தொடரும்…
– க.அரவிந்த்குமார்