நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா…
வக்ஃபு என்றால் என்ன?
முதலில் வக்ஃபு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டால் இதன் உள்ளார்ந்த சிக்கல்களை உணர்ந்து கொள்ள முடியும். வக்ஃபு என்பது இறைக்கொடை. அதாவது இறைப்பணிக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தான் வக்ஃபு எனப்படுகின்றன. இவற்றை நிர்வகிக்கும் குழுவினர் தான் வக்ஃபு வாரியத்தினர். அவர்கள் இந்த சொத்துக்களை வைத்து என்ன செய்கின்றனர். கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர், இடுகாடுகளை பராமரிக்கின்றனர், பள்ளிவாசல்களை கட்டுகின்றனர், இயலாதோருக்கான உறைவிடங்களை உருவாக்கின்றனர்.. இப்படி ஏராளமானவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.
வக்ஃபு வாரியம் என்றால் என்ன?
1954-ல் முதல்முறையாக வக்ஃபு சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1995-ல் புதிய வக்ஃபு சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் வக்ஃபு வாரியத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2013-ல் மேலும் சில திருத்தங்கள்.
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென்ற ஒரு வக்ஃபு வாரியம் உள்ளது. இதில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று பார்த்தால், மாநில அரசின் பிரதிநிதிகள், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள், பார் கவுன்சிலைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியது இந்த வக்ஃபு வாரியம்.
வக்ஃபு வாரிய சொத்துகள் எவ்வளவு?
தற்போதைய கணக்கின்படி நாடு முழுவதும் 8,70,000 அசையா சொத்துக்கள் (கட்டிடங்கள்)… 16,173 அசையும் சொத்துக்கள் (வாகனங்கள், நகைகள், ரொக்கம்) மற்றும் 3,56,031 எஸ்டேட்கள் ( 8லட்சம் ஏக்கருக்கு மேல்…) கட்டிடங்கள் மற்றும் நிலங்கள் ஆகியவற்றை மொத்தமாக சேர்த்தால் ஏறத்தாழ 9.4 லட்சம் ஏக்கர் நிலம் வக்ஃபு வாரிய சொத்தாக உள்ளன. இந்திய ரயில்வே, முப்படைகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரு அமைப்பு தான் வக்ஃபு.
புதிய சட்டத்திருத்தத்தில் என்ன உள்ளது?
தற்போதுள்ள 1995-ம் வருடத்திய வக்ஃபு சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த மசோதா ((Waqf (Amendment) Bill, 2024)) மற்றும் முசல்மான் வக்ஃபு ரத்து மசோதா (( Mussalman Wakf (Repeal) Bill, 2024)) ஆகியவற்றை தாக்கல் செய்தது. மேலும் புதிய சட்டத்திற்கு பெயரும் சூட்டி உள்ளது. … ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) (UMEED). சுருக்கமாக உமீத்.
இந்த சட்டத்திருத்தம் கூறுவது என்ன?. இஸ்லாம் அல்லாத ஒருவர் அல்லது 5 வருடங்களாக இஸ்லாத்தை பின்பற்றாத ஒருவர் வக்ஃபு அதாவது நன்கொடை கொடுக்க இயலாது. அதேபோன்று இரண்டு வகையான வக்ஃபுகள் உள்ளன. ஒன்று அல்லாவுக்கு என்று நிரந்தரமாக எழுதிக் கொடுக்கப்படும் சொத்துக்கள். இரண்டாவது தர்மமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் கவனித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு கட்டிடம் வக்பு சொத்தாக கொடுக்கப்பட்டால் அதன் மாதவாடகை, வருவாய் போன்றவற்றை வாரிசுகள் கையாள முடியும்.
இந்த இரண்டாவது வகையான நன்கொடையில் தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது கையாள்வதில் அக்குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உரிமை தருகிறது. அதேபோன்று வக்ஃபு வசம் உள்ள சொத்துக்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் பத்திரப்பதிவு செய்துவிட வேண்டும். ஒருவேளை அந்த சொத்தில் தகராறு ஏற்பட்டால் இனி வக்ஃபு வாரியம் முடிவு எடுக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுத்து அது வக்ஃபுக்கு உரிய சொத்தா? இல்லையா? என்பதை முடிவு செய்வார். அதாவது ஷரியத் சட்டத்தின்படி ஒருமுறை வக்ஃபுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் திருப்பிக் கொடுக்கப்பட முடியாது. இனி திரும்ப பெற இயலும். ஒட்டுமொத்தமாக வக்ஃபு சொத்துக்களின் மேலாண் உரிமை வாரியத்திடம் இருந்து அரசுக்கு செல்கிறது. அவ்வளவுதான்.
வக்ஃபு கவுன்சிலில் திருத்தம்
அதேபோன்று மத்திய வக்ஃபு கவுன்சிலிலும் மாற்றம் ஒன்றை இது கொண்டு வருகிறது. இதுவரை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டும்தான் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இனி முஸ்லீம் அல்லாத இரண்டு பேர் இந்த கவுன்சிலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இருக்கின்ற கவுன்சிலின் இஸ்லாமிய உறுப்பினர்களில் இரண்டு பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஷியா, சன்னி தவிர போஹ்ரா, அககானி ஆகிய இஸ்லாமிய பிரிவுகளுக்கு என்று தனித்தனியாக வக்ஃபு வாரியங்கள் உருவாக்கப்படும் என்பதும் திருத்தங்களில் ஒன்று.
வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு ஏன்?
அடிப்படையில் வக்ஃபு என்பது மத நம்பிக்கை சார்ந்த விஷயம். மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கைகளுக்குள் மூக்கை நுழைப்பது விரும்பத்தகாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. சீக்கியர்களிடம் தலைப்பாகை கூடாது என்றோ, பொற்கோயில் நிர்வாகத்தை இனி அரசுதான் மேற்கொள்ளும் என்றோ கூறமுடியுமா என்பது எதிர்ப்பவர்களின் கேள்வி.
அதேபோன்று அரசு நிர்வாகத்தின் தலையீடு அதிகரிக்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. இது வக்ஃபு என்ற தன்னாட்சி அமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. வக்ஃபு சொத்தாக பெறப்படும் நிலங்களை இனி நிலஅளவை அதிகாரி அளக்க முடியாது, மாவட்ட ஆட்சியர் தான் செய்ய முடியும். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 4.78 லட்சம் ஏக்கர், ஆந்திராவில் 4 லட்சம் ஏக்கர், தெலுங்கானாவில் 87 ஆயிரம் ஏக்கர், ஒடிசாவில் 12 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதும் அவர்களின் கேள்வி.
மேலும், இஸ்லாமியர் அல்லாதவரை வக்ஃபு கவுன்சிலில் கொண்டு வருவது அவர்களுக்கு மனவலியைத் தருகிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் அறங்காவலராக நர்கீஸ்கான் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்து அல்லாதவர் எப்படி கோயிலில் பொறுப்பு வகிக்க முடியும் என்று தமிழக பாஜகவினர் கொந்தளித்தனர். ஆனால் பிறகுதான் தெரிந்தது அந்த நர்கீஸ்கான் ஒரு இந்து என்று… இதே கொந்தளிப்பு வக்ஃபு வாரிய கவுன்சிலில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்கும்போது அவர்களுக்கு ஏற்படாதா? இது மட்டும் சரியா?. உங்களுக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?.. என்பது அவர்களின் கேள்வி.
வக்ஃபு வாரிய உறுப்பினர் நியமனத்திலோ, தலைவர் தேர்தலிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ இதுகாறும் வெடித்துச் சிதறும் அளவுக்கு எந்த சிக்கலும் இல்லை. இதனை மறுசீரமைக்க வேண்டும் என்று இஸ்லாமியர் தரப்பில் இருந்து கோரிக்கைகளும் வைக்கப்படவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய நில உடைமையும், சொத்துக்களும் மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. இதனை கையாளும் உரிமையை நீண்டதாடி வைத்திருக்கும் சில முத்தவல்லிகள் வைத்திருப்பதா? என்பதே காரணமாக இருக்கிறது.
ஒருவேளை இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் காலப்போக்கில் வக்ஃபு வாரியம் என்ற அமைப்பே நசிந்து போகக்கூடும். மெல்ல மெல்ல மாவட்ட ஆட்சியர் என்றநிலையில் இருந்து மத்திய அரசு என்ற இடத்தை நோக்கி வக்ஃபு சொத்துக்களின் உரிமை மாறக்கூடும். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை இனி மாவட்ட ஆட்சியர் மூலமாக தனியார் நிறுவனங்கள் கையாள தூக்கிக் கொடுக்கவே இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசுகொண்டு வருகிறது என்பது அவர்கள் இறுதியாக வைக்கும் குற்றச்சாட்டாகும்.
குடியுரிமை திருத்தச்சட்டம், முத்தலாக் தடைச்சட்டம், வக்ஃபு சட்டத்திருத்தம்… இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் ஒரே நாடு – ஒரே தேர்தல்., பொதுசிவில் சட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கருவிகளாகவே தெரிகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை, அதன் ஆன்மாவை அழிக்கும் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அவை காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையே இரண்டாயிரம் ஆண்டுகால இந்த மண்ணின் வரலாறு கூறுகிறது. பார்ப்போம் இதில் இனி இங்கு என்ன நடக்கும் என்று…
– க.அரவிந்த்குமார்