ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ஒரே நாளில் 36 செல்போன்கள், ஒரு ஐ பேட் திருடிய ஜார்க்கண்ட் கொள்ளை கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கிரிக்கெட் பார்ப்பது போல் சென்று கூட்டநெரிசலை பயன்படுத்தி ஒரே நாளில் 36 செல்போன்களை பறித்து சென்ற 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் வசமாக சிக்கி கொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28 ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஓன்று கூடினர்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அடையாளம் தெரியாத சிலர் அன்று ஒரே நாளில் மைதானத்திற்குள் 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் ஆகியவற்றை பறித்து சென்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், இந்த கிரிக்கெட் போட்டியின் பொழுது வேலூர் மாவட்டத்தில் இருந்து வட மாநில நபர்கள் நான்கு சிறார் உட்பட எட்டு பேர் முன்னதாகவே சென்னை வந்து அறை எடுத்து தங்கி பிளாக்கில் டிக்கெட் வாங்கி கிரிக்கெட் பார்ப்பதற்காக உள்ளே சென்றதும், பின்னர் அந்த கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர்களிடமிருந்து 36 செல்போன்கள், ஒரு ஐபேட் ஆகியவற்றை திருடிக் கொண்டு, மீண்டும் வேலூருக்கு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் வேலூர் சென்று தீவிர விசாரணை நடத்தி வேலூரில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 8 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நொய்யா, விஷால் குமார் மொஹோத், கோபிந்குமார், ஆகாஷ் நொனியா, மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த கும்பலை சேர்ந்த 8 பேரும் திட்டமிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வேலூர் வந்து அங்கு அறை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின்னர், வேலூரில் இருந்து சென்னை சேப்பாக்கம் வந்து அறை எடுத்து தங்கி மறுநாள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொண்டு கிரிக்கெட் பார்ப்பது போல் மைதானத்திற்குள் சென்று அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி 36 செல்போன்கள் பறித்து கொண்டு, மீண்டும் வேலூர் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து, அந்த திருட்டு கும்பல் திருடிய செல்போன்கள், ஐ பேட் ஆகியவற்றுடன் நேற்று வேலூரில் இருந்து ஜார்கண்ட் தப்பி செல்லுவதற்காக, வேலூர் பேருந்து நிலையம் வந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் இருந்து 36 செல்போன்கள் ஒரு ஐ பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.