தங்கையை காதலித்தவர் நண்பர்களுடன் சேர்ந்து, காதலியின் அண்ணனின் பைக் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது தங்கை கல்லூரி மாணவி.
அத்துடன், விடுமுறை நாட்களில் நங்கநல்லூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, கல்லூரி மாணவிக்கும், பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நெல்சன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு நெல்சனின் தாயார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்த நெல்சனின் தாயார், அவரது சகோதரியை ஆபாசமாக திட்டி அவரது தங்கையை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ரஞ்சித்குமார் தனது சகோதரியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனை அறிந்து நெல்சன், அவரது வீட்டிற்கு வந்து ஏன் அனுப்பி வைத்தீர்கள்? எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து, நெல்சன் தொடர்ந்து ரஞ்சித் குமாருக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நெல்சன் அவரது நண்பர் ஜெய்யுடன் வந்து மதுபோதையில் பைக்கை எடுத்து கொண்டு சென்று விட்டார். மேலும் தன்னிடம் வாக்குவாதம் செய்து, ரஞ்சித் குமாரின் செல்போனை பறித்துக் கொண்டு தன்னிடம் பிரச்னை செய்தால் உன்னை கொன்று விடுவேன் என கூறி தகாத வார்த்தையில் பேசி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, பைக்கை எடுத்து சென்ற ஜெய்யுடைய பைக்கை ரஞ்சித்குமார் எடுத்து கொண்டு நண்பர் வீடான விஷ்வா வீட்டில் நிறுத்தி வைத்தார்.
நெல்சனுக்கு போன் செய்து தனது இருசக்கர வாகனத்தை கொடுத்தால் ஜெய்க இருசக்கர வாகனத்தை கொடுப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, உள்ளகரம் பாரதி குறுக்கு தெருவிற்கு வந்து நெல்சன், ஜெய் பெட்ரோல் குண்டை பைக் மீது வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அப்போது, ரோந்து பணியில் இருந்த மடிப்பாக்கம் போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி கோகுல் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும் விஷ்வா உள்பட 6 பேரை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.