திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் தூக்கம் கெடுக்க வைத்ததில் முதன்மையானவர் விழுப்புரத்துக்காரரான அமைச்சர் பொன்முடி தான். வாயை திறந்தாலே ஆபாசம், சர்ச்சை.. படித்து பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றி ஆறுமுறை எம்எல்ஏ-வாக பதவியிலிருந்து என்ன பயன்… சமூகநீதிக்காக இயக்கம் கண்ட திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து என்ன பயன்?.. அவர் அள்ளிப்போடும் குப்பைகளை அச்சிலேக் கூட ஏற்ற முடியாதே…
பேருந்துகளில் கட்டணமில்லாமல் மகளிர் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பேசி வருகிறார். ஆனால் 2022-ம் ஆண்டு இந்த திட்டத்தை ஓசி பஸ் என்ற எகத்தாளமாக பேசி ஏடாகூடத்தில் மாட்டிக் கொண்டவர் தான் இந்த பித்தளைமுடி.
ரேஷன்கடை ஒன்றின் திறப்பு விழாவில் பெண்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் முக்கியத்துவம் என்று பேசிக்கொண்டே ஒன்றியக்குழு உறுப்பினரைப் பார்த்து “”ஏம்மா,,. நீ எஸ்சி.தானே..”” என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டவர் தான் இந்த பித்தளைமுடி. அதே ஆண்டில் அரசு நிகழ்ச்சில் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து பெண் ஒருவர் குறுக்கிட்டு தனது குறைகளை கூற முயன்றபோது, “”வாயை மூடிக்கிட்டு சும்மா ஒக்காருமா”” என்று ஒருமையில் அதட்டினார். அத்தோடு நில்லாமல் “”உன் வூட்டுக்காரர் வந்துருக்காரா”” என்ற கேள்வி எழுப்ப, அதற்கு அவர் போய்விட்டார் (காலமாகி விட்டார்) என்று அந்த பெண் பதிலளிக்க “”போயிட்டாரா பாவம் நல்லவேளை”” என்று அவலநகைச்சுவையை உதிர்த்து விட்டு அவரே சிரித்துக் கொண்டார்.
இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் 2023 டிசம்பர் 21 ஆம் தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டநிலையில், எம்எல்ஏ பதவியை இழந்தார். 2024 மார்ச் 11 ஆம் தேதி இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் மீண்டும் அமைச்சரானார். இடைபட்ட நாட்களில், பித்தளை முடியின் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட அவதூறாக வரவில்லை. ஆனால் அமைச்சர் பதவி கிடைத்த நாள் முதல் மீண்டும் தன் வாயை வாடகைக்கு விடும் வேலையை செய்துவந்தார்.
அதன் உச்சமாகத் தான் கடந்த 6-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டியில் பேசிய அவர் பாலியல் தொழிலாளியும், வாடிக்கையாளரும் பேசிக்கொள்ளும் ஒரு உரையாடலை.. சைவம், வைணவத்துடன் ஒப்பிட்டு பேசி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கடவுள் மறுப்பு திமுகவின் ஆதார கொள்கைகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய தினம் திமுகவில் ஒரு முழுமையான நாத்திகனை காண்பது என்பது அரிதினும் அரிது. வெளிப்படையாக கடவுள் நம்பிக்கைகைளை வெளிப்படுத்துவதும், அதனை தூக்கி பிடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதே பித்தளைமுடி, அமைச்சர் சேகர்பாபு விடம் போய், நீங்க சைவமா, வைணவமா என்று இரட்டை அர்த்த தொனியில் பேசுவாரா?.. அப்போ தெரியும் கராத்தே பாபு யார் என்று… சைவம், வைணவத்தை வெறும் மதப்பிரிவாக பார்ப்பது எவ்வளவு பெரிய மடத்தனம். போகிற இடமெல்லாம் தமிழை முதலமைச்சர் தூக்கிப் பிடிக்க என்ன காரணம். அதன் பழமை, அதன் பெருமை. இந்த பழமைக்குள்ளும், பெருமைக்குள்ளும் அடங்கி இருப்பது என்ன சங்க இலக்கியங்கள் தொடங்கி பக்தி இலக்கியங்கள் வரை அனைத்தும் தான். சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளுக்குள் தான் தமிழின் 90 சதவித பண்டைய இலக்கியங்கள் உள்ளன. ஒருபுறம் அவற்றை பெருமை கொண்டாடிக் கொண்டே, மறுபுறம் அதனை மதப்பிரிவாக குறுக்கி மண்டைக்கனம் ஏறி பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
இந்த விஷயத்தில் திமுக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. வாக்கரசியல் என்பதைத் தாண்டி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற உயரிய பதவியை வகித்த போதிலும் அதிலிருந்து உடனடியாக பித்தளைமுடி நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் சொன்னது தான்.. ””பாத்ரூம், பெட்ரூமை தவிர மற்ற இடங்கள் பொது இடங்கள் என ஆகிவிட்டன. எல்லா இடங்களிலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள். பொதுவெளியில் அமைச்சர்களும், கட்சியினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்” இப்போது வரை அவருடைய பேச்சை மூத்த அமைச்சர்கள் கூட கேட்கவில்லை என்பதுதான் உண்மை.
ஆண்டைகளுக்கும், பண்ணையார்களுக்கும், ஜமீன்தார்களுக்கும், மிட்டா – மிராசுதாரர்களுக்கும் எதிராக சமூகநீதி என்ற கொள்கை கோட்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி திமுக. இன்றோ அதன் அமைச்சர் பெருமக்களில் பலர்… இதன் வரலாற்றை மறந்துவிட்டு அல்லது தெரியாமல் தங்களை ஆண்டைகளாக, பண்ணையார்களாக பாவித்துக் கொண்டு நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது…
– க.அரவிந்த்குமார்