உடலுக்கு வெளியில் சுத்தம் செய்தால் மட்டும் போதாது. உடலுக்கு உள்ளேயும் சுத்தம் செய்ய வேண்டும். இன்றைய தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், பரபரப்பான வாழ்க்கை முறையால் உடலில் நச்சுக்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதை சரியான நேரத்தில் அகற்ற வேண்டும். அப்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அப்படி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முறையை தான் டீடாக்ஸ் என்று சொல்வார்கள்.
நமது உடலை டீடாக்ஸ் செய்வதில் முருங்கை கீரை பெஸ்ட். இந்த முருங்கை கீரையை பொரியாலாக சமைத்து சாப்பிடாமல், அதை பச்சையாக பானங்களாக தயாரித்து குடிக்கும்போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும். தற்போது, முருங்கை இலை டீடாக்ஸ் பானங்கள் வீட்டில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
முருங்கை டீ – அகலமான பாத்திரத்தில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர், அதில் 2 ஸ்பூன் முருங்கை பொடிய சேர்த்து 5 – 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு, அதை வடிகட்டி வாரத்தில் இரண்டு முறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
முருங்கை, வாழைப்பழ ஸ்மூத்தி – மிக்ஸி ஜாரில் 1/2 கப் தண்ணீர் அல்லது காய்ச்சின பால், 1 ஸ்பூன் முருங்கை இலை பொடி மற்றும் 1 பழுத்த வாழைப்பழம் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். இதை வாரத்தில் 2 முறை குடிக்கலாம்.
முருங்கை, மஞ்சள் பானம் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 சிட்டிகை கருப்பு மிளகு, 1 ஸ்பூன் முருங்கை இலை பொடி, 11/2 கப் தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை வாரத்தில் மூன்று முறை குடித்து வந்தால், விரைவில் உடம்பில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
முருங்கை இஞ்சி டீ – பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். அதில் 1 ஸ்பூன் முருங்கை பொடி, சிறிதளவு தோல் நீக்கிய இஞ்சி இரண்டையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதை வடிக்கட்டி வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போதே குடிக்க வேண்டும்.
குறிப்பு:
முருங்கையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் ஏதேனும் தீவரமான உடல்நலப் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
எடுத்தவுடன் அதிகளவு முருங்கை இலைகளை சேர்த்துக்கொள்வது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே, ஆரம்பத்தில் கம்மியாக முருங்கை இலைகளை சேர்த்துக் கொண்டு, படிப்படியாக அதிகப்படித்துக் கொள்வது நல்லது.