தமிழக பாஜக இளைஞரணி தலைவர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை குடும்பங்களுக்கு இலவச தையல் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கினார்.
பொதுச் சேவை செய்வதன் மூலம் தனது பிறந்த நாளை கொண்டாடுவதை தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவரும், நமோ வாசவி அறக்கட்டளையின் (NaMo Vasavi Foundation) நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ்.ஜி.சூர்யா வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட் 03, 2025) நமோ வாசவி அறக்கட்டளை சார்பில் சென்னை, அடையார் யூத் ஹாஸ்டலில் ஒரு மகத்தான மக்கள் சேவை நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சுயசார்பு வாழ்வை ஊக்குவிக்கும் விதமாக, தென் சென்னை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு 30 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் 60 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் குடும்பங்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை வழங்கவும், தையல் இயந்திரங்கள் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும் அதிகாரமளித்தலையும் மேம்படுத்தவும் பேருதவியாக இருக்கும்.
மேலும், இந்நிகழ்வின் போது பேசிய டாக்டர் எஸ்.ஜி.சூர்யா, ‘பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் “சுயசார்பு பாரதம்” என்ற கனவால் தான் உத்வேகமடைந்ததாகவும் மற்றும் இந்தியா சுயசார்பு அடைவதற்கு, நாமும், நம் குடும்பங்களும் சுயசார்பு அடைவது மிக அவசியம் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் தாய்மார்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது சுமையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதையும்’ சுட்டிக்காட்டினார்.
அதேபோல், ஆட்டோ ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டது குறித்துப் பேசிய டாக்டர் எஸ்.ஜி.சூர்யா, திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அது நடக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். சிறு வயதிலிருந்தே தனக்கு சமூக சேவையில் ஆர்வம் இருப்பதாகவும், நமோ வாசவி அறக்கட்டளை மூலம் மக்களின் வாழ்க்கை மேம்பட ஒரு சிறு காரணமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நமோ வாசவி அறக்கட்டளை, கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் விரிவான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை “கற்க கசடற” என்ற திட்டத்தின் கீழ் 950-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் 7 இடங்களில் “நமோ குருகுகுலம்” (NaMo Gurukulam) என்ற சமூக மையங்களை நிறுவி 2700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி வருகிறது.
“நமோ மீல்” (NaMo Meal) திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சத்தான உணவை வழங்கி வருகிறது. கோவிட்-19 காலகட்டத்தில், 50,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் 7000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கூட 50,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.