காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு கழட்டிவிட பார்த்த காதலனை, காதலி போராடி கரம் பிடித்து உள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான தமிழரசன், அதே ஊரைச் சேர்ந்த ரோஸ்லின் மேரி என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி வேலைப் பார்த்து வந்த நிலையில், அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தன்னை திருமணம் செய்துகொள்ள ரோஸ்லின் மேரி வற்புறுத்திய நிலையில், ஒவ்வொரு முறையும் அதை தமிழரசன் தட்டிக் கழித்து வந்து உள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து, இரு தரப்பையும் வைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இதில், முதலில் திருமணத்திற்கு மறுத்த தமிழரசன், ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால், அருகில் உள்ள கோயிலுக்கு உறவினர்களும், ஊர் பெரியவர்களும் அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்றதும், மீண்டும் திருமணம் செய்ய மறுத்து குழந்தை போல் அடம் பிடித்த தமிழரசனை பார்த்து, சுற்றி நின்ற உறவினர்கள், “ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துராதடா” என்று, அறிவுரை கூறினர். ஆனால், அவர் “ஒரே ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்கணா. ப்ளீஸ்னா” என மறுத்துக் கொண்டே இருந்தார். ”
குறிப்பாக, “அண்ணா ப்ளீஸ்ணா, என்ன விட்ருங்கண்ணா” என்று, அவர் கெஞ்சவும் செய்தார்.
ஒரு கட்டத்தில் வேண்டா வெறுப்பாக மாலையை பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டு, ஓடப் பார்த்த தமிழரசனை, சுற்றி நின்றவர்கள் இழுத்து பிடித்தனர். இதனையடுத்து, தாலி கட்ட முரண்டு பிடித்த தமிழரசன், “ஒரு நிமிஷம் இருங்கண்ணா, ஏண்ணா இப்படி பண்றீங்க?, ஒரே ஒரு நாள் தாண்ணா கேக்குறே”ன்னு, நைசாகப் பேசி நழுவப் பார்த்தார்.
ஆனாலும், பெண்ணின் உறவினர்களோடு சண்டையிட்ட தமிழரசனிடம், பெண் வீட்டார் கெஞ்சி கூத்தாடி பார்த்தனர். அதையெல்லாம் சோகத்தின் உருவாக அமர்திருந்து பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார் ரோஸ்லின் மேரி.
இறுதியில் வேறு வழியில்லாமல் ரோஸ்லின் மேரியிடம் சென்று சரணாகதி அடைந்து கெஞ்சிப் பார்த்தார் தமிழரசன். ஆனால், அவரிடம் பருப்பு ஒன்றும் வேகவில்லை. இறுதியாக வழிக்கு வந்த தமிழரசன், “வேண்டா வெறுப்பாக ரோஸ்லின் மேரியின் கழுத்தில் தாலி” கட்டினார்.
திருமணம் முடிந்ததும், தமிழரசனின் உறவினர்கள் சிலர், போலீசாரையும், பெண் வீட்டாரையும் வாய்க்கு வந்தபடி வசைபாடினர்.
திருமணம் முடிந்தாலும் என் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்பது தெரியவில்லை என கவலையாக கூறிய ரோஸ்லின் மேரி, தமிழரசன் வீட்டாரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, இவர்களது திருமணம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.