கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளும் திருநங்கை மீது நடவடிக்கை எடுக்ககோரி குறிப்பிட்ட ஒரு திருநங்கை மீது 21 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மந்த்ரா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 27 ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், “21 திருநங்கை தலைவிகள் திருநங்கைகளுக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கு ஆண் உறுப்பு அகற்றல், சிலிக்கான் போன்ற மார்பகங்கள் வைக்கிறோம் என்று நம்ப வைத்து ஏமாற்றுவதாகவும், அவர்களை பகலில் பிச்சை எடுக்கவும், இரவில் பாலியல் தொழில் ஈடுபடுத்திகிறார்கள்” என்றும், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 21 திருநங்கைகளும் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கு பாதுகாப்பிற்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, 21 திருஙங்கைகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், “சென்னையில் உள்ள திருநங்கைகள் ஒன்றாக இணைந்து பகுதி வாரியாக திருநங்கைக நலன் பார்க்கிறோம். திருநங்கைகள் சிலர் பொது இடங்களில் அத்துமீறி தவறுகள் செய்தால் தட்டிக்கேட்டு அவர்களை சரி செய்கிறோம். திருநங்கைகளை ஒருங்கிணைக்கும் வழக்கத்தை ஜமாத் முறை என்று கூறுவோம். அதில் தலைவர்களாக இருப்பவர்களை நாயக் என்றும் கூறுவோம்.
20 நாட்களாக பரங்கிமலையை சார்ந்த திருநங்கை மந்த்ரா என்பவர் எங்களை அவதூறு பரபரப்பி வருகிறார். எங்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை குறித்தும் ஊடகங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துகிறார். எங்களுடன் சென்னையில் இருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
திருநங்கை மந்த்ரா மீது ஏற்கனவே ஆலந்தூர் காவல் நிலையத்தில் சில வழக்கு உள்ளது. அவர் வீட்டில் இருந்த 2 திருநங்கைகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது போன்ற கொடூர குணம் கொண்ட இவர் திருநங்கைகள் நலம் சார்ந்து வாழ்ந்து வரும் எங்களை தாக்கி வருவது குறித்து புகாரை தங்களிடம் அளித்து உள்ளோம். திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த புகாரில் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், புகார் குறித்து செய்தியாளர்களிடம் திருநங்கைகள் பேசுகையில், “திருநங்கை மந்த்ரா சில திருநங்கைகளை பாலியல் தொழில் தள்ளுகிறார். பாலியல் தொழில் மூலம் தினமும் 3 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி உடல் ரீதியிலான துன்புறுத்தலை அளிக்கிறார். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளை எங்கள் அமைப்பு மீட்டு கவுன்சிலிங் கொடுத்து மாற்றுகிறோம். ஆனால், அது திருநங்கை மந்த்ராவிற்கு பிடிக்கவில்லை. அவருக்கு மனநோய்” இருக்கிறது, என்றும் புகார் கொடுத்த திருநங்கைகள் பேசினார்கள்.