சென்னையில் அரசு பேருந்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட காவலர் தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது.
அதாவது, பேருந்தின் நடத்துநர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் அந்த காவலர் பெயர் ஆறுமுகப்பாண்டி என்பது தெரிந்தது.
தொடர்ச்சியாக, நாங்குநேரியில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த ஆறுமுக பாண்டி நேற்று பரங்கிமலை ஆயுதப்படையில் ஓவர் ஏரி அதிகாரியிடம் விளக்கம் அளிக்க சொன்னதை தொடர்ந்து, நேற்று மாலை பரங்கிமலை ஆயுதப்படையில் மயக்கம் அடைந்தார். தற்போது, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாகவே, அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே சண்டை மூண்டு உள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் NO பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர். காவலர் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சர்ச்சையான நிலையில், பேருந்து ஓட்டுநர்களிடம் போக்குவரத்து போலீசார் கறார் காட்டுவதாக சமூக வலைதளங்கள் மூலம் காவலர்கள் இந்த தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதன்படியே, சென்னையில் அரசு பேருந்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
ஆனால், இப்படி விதிமீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் விளக்கம் ஒன்றையும் அளித்து உள்ளனர். எனவே, இந்த மோதல் போக்கிற்கு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்து உள்ளது.