கருவில் இருக்கும் குழந்தை பற்றிய விவரங்களை வெளியிட்ட விசயத்தில் பிறயூடியூபர் இர்பான் செய்தது சரியா? தவறா? என்று யூடியூப்பில் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது.
யூடியூபர் இர்பானின் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை பற்றிய விவரங்களை யூடியூபர் இர்பான் அண்மையில் வெளியிட்ட விவகாரம் பெரிய அளவில் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
இது குறித்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
அதாவது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இர்பான் இல்லத்திற்கு நேரடியாக சென்ற சுகாதார துறை அதிகாரிகள், அவரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
மருத்துவத்துறையின் மருத்துவ சட்டங்கள் தொடர்பாக பார்க்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் குழு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “இந்த சோதனை எங்கே செய்யப்பட்டது? ஏன் வீடியோ வெளியிட்டீர்கள்?” என்பது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி விளக்கம் கேட்டு நோட்டீசும் இர்பானிடம் நேரில் கொடுக்கப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனது தவறை ஒப்புக்கொண்ட இர்ஃபான், “ஏற்கனவே வீடியோவை பக்கத்திலிருந்து நீக்கி விட்டதாக” தெரிவித்து உள்ளார். அத்துடன், அதிகாரிகளிடம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்டுள்ளார் அவர்.
இதை அடுத்து சிசுக்கலைப்பு தொடர்பாக விழிப்புணர்வு வீடியோவை அதிகாரிகள் இர்ஃபானை அவரது யூடியூப்பில் பக்கத்தில் பதிவேற்ற அறிவுறுத்தி உள்ளனர். அந்த வீடியோவும் விரைவில் வெளியிடுவதாகவும் அவர் உறுதி அளித்து உள்ளார். அதன் பிறகு தான், அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.