தொழிலதிபருக்கு காதல் வலை விரித்து நேரில் வரவழைத்து காரில் கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில், கில்லாடி இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை பக்சி அலித் தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதின். இவர் சென்னை பாரிமுனை பர்மா பஜாரில் செல்போன், லேப்டாப் விற்பனை கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவித் சைபுதினுக்கு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து, இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டதை அடுத்து இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த பெண் ஜாவித்க்கு காதல் வலை விரித்து ஆசை வார்த்தை கூறி பேசி வந்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு ஜாவித் சைபுதினை தொடர்பு கொண்ட அந்த பெண் பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ 2 வது தெருவில் உள்ள வீட்டில் மது விருந்து நடப்பதாகவும் நீங்கள் என்னுடைய முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதனை நம்பி ஜாவித் சைபுதினும் அந்த பெண் கூறிய முகவரிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அந்த முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் காரில் சுற்றி வந்த ஜாவித் ஒரு கட்டத்தில் பட்டினம்பாக்கம் கற்பகம் அவென்யூ 2 தெருவில் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அந்த பெண்ணிடம் விலாசம் கேட்டு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தீடிரென ஜாவித் சைபுதினை மிரட்டி வேறொரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 10 ஆயிரம் பணம், கார் சாவி முதலியவற்றை பறித்துக் கொண்ட கடத்தல் கும்பல் அதன் பிறகு ஜாவித்தை மதுரவாயல் அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து உள்ளனர்.
மறுநாள் அந்த கும்பல் “உன்னை கொலை செய்தால் 50 லட்சம் பணம் தருவதாகவும்,
கை, காலை வெட்டி வீடியோ எடுத்து அனுப்பினால் 20 லட்சம் பணம் தருவதாகவும்” எங்களுக்கு ஆஃபர் வந்துள்ளது என கூறியதை கேட்டு பயந்து போன ஜாவித் சைபுதின் அந்த ரூ. 50 லட்சத்தை தானே தருவதாக கூறியுள்ளார்.
ஜாவித் சைபுதின் தனது நண்பர் தன்வீர் என்பவர் மூலம் மயிலாப்பூர் நடுக்குப்பம் பகுதியில் வைத்து ரூ. 50 லட்சத்தை கடத்தல் கும்பல் பெற்று கொண்டனர். பிறகு ஜாவித் சைபுதினை சேத்துப்பட்டு பாலம் அருகே இறக்கி விட்டு கார் சாவி, 150 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை கொடுத்து விட்டு கடத்தல் கும்பல் காரில் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, ஜாவித் சைபுதின் கடந்த 23 ஆம் தேதி இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாவித்துடன் செல்போனில் பேசிய பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சோனியா (32) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட கூட்டாளிகள் குறித்து போலீசார் கைதான சோனியாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கூட்டாளிகள் குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.