கர்ப்பிணி பெண் ஒருவர் கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன், அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 32 வயது மனைவி தேவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தற்போது, தேவி கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தேவி சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான், தேவி நேற்று முன் தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், நேற்று காலை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் “மனைவியை காணவில்லை” என்று, அவரது கணவர் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி உள்ளது.
உடனே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் உள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கால்வாய் சிலாப்க்கு அடியில் பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரிய வந்தது. உடனே, அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கால்வாய் சிலாப்க்கு அடியில் சிக்கி கொண்ட சடலத்தை கடப்பாரை கொண்டு சிலாப்பை அகற்றி பார்த்த போது, கால்வாயில் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில், “தேவி கர்ப்பிணியாக இருந்த தேவியை கால்கள் கட்டி, நிர்வாணமாக்கி கொலை செய்துள்ளது தெரிய வந்து உள்ளதாக” முதல் கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
இதனிடையே, கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.