“ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்போடு “விடுதலை-2” ஆம் பாகம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும்” என்று, நடிகர் சூரி தெரிவித்து உள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் “காலம் உள்ளவரை கலைஞர் என்னும் தலைப்பில் நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை பார்வையிடுவதற்காக நடிகர் சூரி வருகை தந்தார். அப்போது, நடிகர் சூரி மற்றும் அஜய் ரத்தினம் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சூரி, “வரலாற்றை சிறப்பாக காட்டி உள்ளனர். இதை யாவரும் தவறவிடக்கூடாது. 100 நாட்கள் பிறந்த நாளை கொண்டாடுவது சாதாரன விசயமில்லை. அதற்கு தகுதியானவர் கலைஞர்” என்று, பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், “கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்த உணர்வு இந்த கண்காட்சியை பார்த்ததில் இருந்தது. பூமி உள்ளவரை இது நிலைத்திருக்கும்” என்றும், புகழ் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, “கருடன் படம் அனைவரும் கொண்டாடும் விதமாக அமைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும், “விடுதலை-2” பாகம் ஆகஸ்ட்டில் வெளியாகும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நடிகர் அஜய் ரத்தினம் பேசும் போது, “கலைஞர் என்றால் ஒரு சரித்திரம். கலைஞரை இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அத்தனையும் கண்ணுக்கு முன் இந்த கண்காட்சி மூலமாக காட்டி உள்ளனர். தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு கொடுத்து உள்ளார். அதற்கு மக்கள் கொடுத்த பரிசு தான் 40/40 என்று வெற்றியை தந்து உள்ளனர்” என்றும், அவர் பேசினார்.