பாலியல் தொழில் நடப்பதாக கூறி, ஓட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஓட்டல் மேலாளரை மிரட்டிய போலீஸ்காரர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் “ஜிஞ்சர்” என்னும் பெயரில், தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 31-ஆம் தேதி அன்று, ஓட்டலுக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து “நான், விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என்றும், ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்து உள்ளது” என்றும், கூறியிருக்கிறார்.
அத்துடன், அந்த நபர் அந்த ஓட்டல் மேனஜர் ஜெகன் என்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த மேனஜர் மாமூல் தர மறுக்கவே, அப்போது அவர்கள் இருவருகு்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மேலாளரை வந்த நபர் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த நபர், ஓட்டல் அறைகளில் சோதனை செய்ய சென்றார். இதனையடுத்து, ஓட்டல் மேலாளர் ஜெகன் குறித்து, அடுத்த சில நாட்களில் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில், அங்கு வந்தவர் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பவ்ஷா என்பதும், 8 வது பட்டாலியன் காவலர் என்பதும் தெரிய வந்தது. அவர், திருவான்மியூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனியார் ஸ்பா மையத்திற்கு சென்று, தான் அடையாறு காவல் துணை ஆணையர் தனிப்படை போலீஸ் என்று மிரட்டி, மாமூல் வசூலித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தற்போது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, வடபழனி போலீசார், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சிறை வைத்தல், ஆபாசமாக திட்டுதல், அத்து மீறி நுழைதல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.