Mon. Dec 23rd, 2024

பழிக்கு பழியாக பாஜக நிர்வாகியின் கணவர் வெட்டப்பட்டாரா?

By indiamediahouse Jun15,2024

பாஜக பெண் நிர்வாகியின் கணவர் துரத்தி துரத்தி வெட்டபட்ட விவகாரத்தில், “19 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக பாஜக நிர்வாகியின் கணவர் வெட்டப்பட்டாரா?” என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜகவின் மகளிரணி மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன்‌, சென்னை அண்ணாநகர் தங்கம் காலனி பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்த சூழலில் தான், நேற்று மதியம் சீனிவாசன் சென்னை திருமங்கலம் கார்டன் 6- வது அவென்யூ பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, சீனிவாசனை வழி மறித்து வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். சென்னையில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சீனிவாசனை மீட்டு, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, மேல் சிகிச்சைக்காக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து, சீனிவாசனின் மனைவி் நதியா கொடுத்த புகாரின் பேரில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நாய் பாபு என்பவருக்கும், சீனிவாசனுக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சீனிவாசனை இந்த நாய் பாபு போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக நாய் பாபுவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி என கூறப்படும் வெள்ளை ராஜேஷ், நாய் பாபு மற்றும் சிலர் தான் சீனிவாசனை வெட்டியதாக தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் கூறினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன், சரவணன், ராஜேஷ் , கணேசன் ஆகிய 6 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அதாவது, கடந்த 2005 ம் ஆண்டு சௌகார்பேட்டையில் நெடுஞ்செழியன் என்பரை கொலை செய்த வழக்கில், சீனிவாசன் மற்றும் அவரது மாமனார் ராஜேந்திரன் ஆகியோர் கைதாகி, அதன் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், சரணடைந்தவர்களில் பிரசாந்த் என்பவர் நெடுஞ்செழியனின் நெருங்கிய உறவினர் ஆவர். அதனால், “ரவுடி கும்பல் மூலம் 19 ஆண்டு பகைக்கு பழிதீர்த்தாரா?” என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *